இந்தியா

மணிப்பூர் ஓராண்டு காலமாக அமைதிக்காகக் காத்திருக்கிறது: மோகன் பாகவத்

கிழக்கு நியூஸ்

புதிதாகப் பதவியேற்றுள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு மணிப்பூர் பிரச்னைக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் தெரிவித்துள்ளார்.

நரேந்திர மோடி மூன்றாவது முறையாக நாட்டின் பிரதமராகப் பதவியேற்றுள்ள நிலையில், மோகன் பாகவத் இந்தக் கருத்தைத் தெரிவித்துள்ளார்.

மணிப்பூரில் மெய்தேய் சமூகத்தினர் தங்களைப் பழங்குடியினர் பட்டியலில் இணைக்கக் கோரி கோரிக்கை எழுப்பினார்கள். அகில இந்திய பழங்குடியினர் மாணவர்கள் சங்கம் இதை எதிர்த்து பேரணி மேற்கொண்டார்கள். இந்தப் பேரணியில் மோதல் ஏற்பட்டதைத் தொடர்ந்து, கடந்தாண்டு மே 3 முதல் மணிப்பூர் வன்முறையைச் சந்தித்து வருகிறது. இரு பெண்கள் நிர்வாணமாக ஊர்வலம் அழைத்துச் செல்லப்பட்டது, நாட்டையே உலுக்கி தலைகுனியச் செய்தது. பிரதமர் மோடி அங்கு செல்லாமல் இருப்பது பெரும் விமர்சனத்துக்குள்ளானது.

மஹாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் நடைபெற்ற ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் மேம்பாட்டு வகுப்பின் நிறைவு விழாவில் பேசிய மோகன் பகவத், மணிப்பூர் விவகாரத்தைக் கவனத்தில்கொண்டு அதற்கு முக்கியத்துவம் அளிப்பது கடமை என்றார்.

"மணிப்பூர் ஓராண்டு காலமாக அமைதிக்காகக் காத்திருக்கிறது. இதற்கு முக்கியத்துவம் கொடுத்து விவாதிக்கப்பட வேண்டும். கடந்த 10 ஆண்டுகளாக மணிப்பூர் அமைதியாகத்தான் இருந்தது. பழைய துப்பாக்கி கலாசாரம் முடிவுக்கு வந்துவிட்டாகத் தோன்றியது. ஆனால், அங்கு எழுந்த அல்லது எழுப்பப்பட்ட திடீர் பதற்றத்தால் மணிப்பூர் இன்னும் பற்றி எரிகிறது. இதற்கு யார் கவனம் செலுத்துவது?. இதைக் கவனத்தில் கொண்டு முக்கியத்துவம் அளிப்பது கடமை" என்றார் அவர்.

எதிர்க்கட்சிகள் குறித்து பேசிய அவர், "எதிர்க்கட்சியினரை எதிரியாகக் கருதக் கூடாது. அவர்கள் மறுபக்கத்தை வெளிப்படுத்தக்கூடிய மாற்றுக் கட்சியினர். அவர்களுடையக் கருத்துகளும் வெளிச்சத்துக்கு வர வேண்டும். இரு பக்கங்கள் இருக்கின்றன. இவர்கள் எதிர் தரப்பு என்று அழைக்கப்படுகிறார்கள். நான் அவர்களை எதிர்வாத தரப்பு என்று அழைப்பேன். இவர்களை ஒருபோதும் எதிரியாகக் கருதக் கூடாது" என்றார் மோகன் பாகவத்.

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் மணிப்பூரிலுள்ள இரு தொகுதிகளிலும் பாஜக தோல்வியடைந்தது.