மணிப்பூரில் மெய்தேய் இனத்தின் ஆயுதக் குழுவான அரம்பாய் தெங்கோல் அமைப்பின் தலைவர்கள் ஐவர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அங்கு மீண்டும் வன்முறை வெடித்துள்ளது.
மணிப்பூரில் கடந்த மே 3, 2023 முதல் மெய்தேய் மற்றும் குகி எனும் பழங்குடியினர் இடையே வன்முறை வெடித்து வருகிறது. இந்த வன்முறையைத் தொடர்ந்து, 60 ஆயிரம் பேர் மணிப்பூரிலிருந்து இடம்பெயர்ந்துவிட்டார்கள். 250-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளார்கள். மணிப்பூர் முதல்வர் பதவியை பிரேன் சிங் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, கடந்த பிப்ரவரி 13 முதல் அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சி அமலில் உள்ளது.
மெய்தேய் இனத்தின் ஆயுதக் குழுவான அரம்பாய் தெங்கோல் அமைப்பைச் சேர்ந்த 5 பேர் பாதுகாப்புப் படையினரால் சனிக்கிழமை கைது செய்யப்பட்டார்கள். கைது செய்யப்பட்டவர்களில் இந்த அமைப்பின் தலைவரும் ஒருவர் என்று தகவல் வெளியாகிறது. இந்தக் கைது நடவடிகையைக் கண்டித்து அங்கு சனிக்கிழமை மீண்டும் வன்முறை வெடித்தது.
போராட்டக்காரர்கள் சாலையின் நடுவே பழைய பொருள்கள், டயர்கள் உள்ளிட்டவற்றைத் தீயிட்டுக் கொளுத்தினார்கள். இம்பாலில் மேலும் சிலர் தங்கள் மீது பெட்ரோல் ஊற்றி எரித்துக்கொண்டு தற்கொலைக்கு முயற்சித்திருக்கிறார்கள்.
பதற்றமான சூழலைத் தணிப்பதற்காக இம்பால் மேற்கு, இம்பால் கிழக்கு, தௌபால், காக்சிங் மற்றும் பிஷ்ணுபூர் ஆகிய 5 மாவட்டங்களில் 5 நாள்களுக்கு இணைய சேவைகள் மற்றும் மொபைல் இணைய சேவைகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், பிஷ்ணுபூர் மாவட்டத்தில் காலவரையற்ற ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மற்ற நான்கு மாவட்டங்களில் 4 அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் கூடத் தடை விதிக்கப்பட்டுள்ளது.