கோப்புப்படம் 
இந்தியா

நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்: பிரதமருக்கு மமதா கடிதம்

பணக்காரர்களுக்கு மட்டுமே பலனளிக்கக்கூடிய வகையில் தற்போதைய முறை அமைந்துள்ளது. தகுதிவாய்ந்த ஏழை மாணவர்கள், நடுத்தர வர்க்கத்தினர் இதனால் பெரிதளவில் பாதிக்கப்படுகிறார்கள்.

கிழக்கு நியூஸ்

மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வில் பல்வேறு குளறுபடிகள் எழுந்ததைத் தொடர்ந்து, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் எனப் போராட்டங்களை நடத்தி வருகின்றன.

இந்த நிலையில் மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி பிரதமர் நரேந்திர மோடிக்குக் கடிதம் எழுதியுள்ளார்.

"பணம் பெற்றுக்கொண்டு நீட் தேர்வு வினாத் தாளைக் கசியவிட்டிருப்பது, தேர்வு முறைகேடுகளில் அதிகாரிகள் ஈடுபட்டிருப்பது போன்ற குற்றச்சாட்டுகள் மிக முக்கியமானப் பிரச்னை. இதுதொடர்பாக விரிவாக, எவ்விதப் பாரபட்சமுமின்றி விசாரணை மேற்கொள்ள வேண்டும். மருத்துவக் கல்வியின் தரத்தில் எவ்வித சமரசமும் செய்துகொள்ளக் கூடாது.

2017-ல் மாநில அரசுகள் சொந்தமாக நுழைவுத் தேர்வுகளை நடத்திக்கொள்ளலாம் என்ற முறை இருந்தது. மத்திய அரசு அவர்களுடையக் கல்வி நிறுவனங்களில் மருத்துவப் படிப்புக்குத் தனியாக நுழைவுத் தேர்வுகளை நடத்திக்கொள்ளலாம். அப்போது இந்த முறையில் எந்தச் சிக்கலும் இல்லை.

ஒரு மருத்துவரின் கல்விக்கு மாநில அரசு 50 லட்சத்துக்கும் மேல் செலவழிக்கிறது. எனவே, ஜேஇஇ மூலம் மருத்துவ மாணவர்களைத் தேர்வு செய்ய மாநிலங்களுக்கு சுதந்திரம் வழங்க வேண்டும். மருத்துவப் படிப்புக்கு மாநில அரசுகளின் தலையீடு இல்லாமல் மாணவர்களைச் சேர்ப்பது முற்றிலும் ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல. இது கூட்டாட்சி முறையின் மாண்மை மீறுவதாகும்.

தற்போதைய முறை பெரிதளவில் ஊழலுக்கு வழிவகுத்துள்ளது. பணக்காரர்களுக்கு மட்டுமே பலனளிக்கக்கூடிய வகையில் இது அமைந்துள்ளது. தகுதிவாய்ந்த ஏழை மாணவர்கள், நடுத்தர வர்க்கத்தினர் இதனால் பெரிதளவில் பாதிக்கப்படுகிறார்கள்.

எனவே, நீட் தேர்வை ரத்து பழைய முறையில் மாநில அரசுகளே தேர்வுகளை நடத்துவதற்கு வழிவகுக்க உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்" என்று மமதா பானர்ஜி தனது கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.