இந்தியா

காங்கிரஸ் தேர்தல் அறிக்கை: பிரதமரிடம் நேரம் கேட்டுள்ள காங். தலைவர் கார்கே

கிழக்கு நியூஸ்

காங்கிரஸ் தேர்தல் அறிக்கை குறித்து நேரில் விளக்கமளிக்க பிரதமர் நரேந்திர மோடியிடம் நேரம் கேட்டு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கடிதம் எழுதியுள்ளார்.

மக்களுடைய சொத்துகளைப் பறித்து அதை பகிர்ந்தளிக்கப்படும் என்கிற வகையில் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை குறித்து பிரதமர் நரேந்திர மோடி பிரசாரம் செய்து வருகிறார். இந்த நிலையில், பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கடிதம் எழுதியுள்ளார்.

"கடந்த சில நாள்களாக உங்களுடைய மொழி மற்றும் பேச்சு எங்களுக்கு அதிர்ச்சியையோ, ஆச்சர்யத்தையோ தரவில்லை. முதற்கட்ட வாக்குப்பதிவில் பாஜகவுக்குவ் பின்னடைவு ஏற்பட்டதைத் தொடர்ந்து, நீங்களும், உங்களுடைய கட்சித் தலைவர்களும் இப்படிதான் பேசுவீர்கள் என எனக்குத் தெரியும். ஏழைகள் மற்றும் அவர்களுடைய உரிமை குறித்து காங்கிரஸ் பேசி வருகிறது. உங்களுக்கும், உங்களுடைய அரசுக்கும் ஏழைகள் குறித்து எந்தக் கவலையும் இல்லை என்பது எங்களுக்குத் தெரியும்.

இன்று நீங்கள் தாலியைக் குறித்துப் பேசுகிறீர்கள். மணிப்பூரில் பெண்களுக்கு எதிரான கொடுமைகளுக்கும், தலித் பெண்களுக்கு எதிரான கொடுமைகளுக்கும் உங்களுடைய அரசு காரணமில்லையா? பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளுக்கு மாலை அணிவிக்கப்படுவதற்கு உங்களுடைய அரசு காரணமில்லையா?

வகுப்புவாத பிரிவினையை உண்டாக்குவது உங்களுடைய வழக்கமாகிவிட்டது. இதுபோன்று பேசுவது உங்களுடைய பதவிக்கு அழகல்ல. தேர்தல் தோல்வி பயத்தில் நாட்டினுடைய பிரதமர் இதுபோன்று தரக்குறைவாகப் பேசியதாக மக்கள் நினைவு வைத்திருப்பார்கள்.

இளைஞர்கள், பெண்கள், விவசாயிகள், தொழிலாளர்கள், அடித்தட்டு மக்களுக்கு நீதியை வழங்குவதே காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை. உங்களுடைய ஆலோசகர்கள், காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் இல்லாதவற்றையெல்லாம் உங்களிடம் தவறாகத் தெரிவிக்கிறார்கள். நாட்டினுடைய பிரதமர் பொய்யான தகவல்களைப் பேசக் கூடாது என்பதற்காக, நான் உங்களை நேரில் சந்தித்து காங்கிரஸ் தேர்தல் அறிக்கை குறித்து விளக்கமளிக்க விரும்புகிறேன்" என்று கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.