பிரதமர் நரேந்திர மோடியை சசி தரூர் பாராட்டி கட்டுரை எழுதியது தொடர்பாக காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மௌனம் கலைத்துள்ளார்.
காங்கிரஸ் தலைமை மற்றும் அக்கட்சியின் மூத்த எம்.பி. சசி தரூர் இடையே ஏற்கெனவே கசப்பான உறவு இருந்து வருகிறது. ஆபரேஷன் சிந்தூருக்குப் பிறகு பயங்கரவாதம் பற்றிய இந்தியாவின் நிலைப்பாட்டை உலக நாடுகளிடம் விளக்க அனைத்துக் கட்சிக் குழுவை மத்திய அரசு அனுப்பியது. அமெரிக்கா, பனாமா, கயானா, கொலம்பியா, பிரேசில் ஆகிய நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்ட அனைத்துக் கட்சிக் குழுவை சசி தரூர் வழிநடத்தினார்.
இந்தக் குழுவுக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் பரிந்துரைக்கப்பட்ட பட்டியலில் சசி தரூரின் பெயர் இடம்பெறவில்லை. மத்திய அரசால் நேரடியாகத் தேர்வு செய்யப்பட்டவர் சசி தரூர்.
அண்மையில் ஹிந்து நாளிதழில் கட்டுரை ஒன்றை எழுதியிருந்தார் சசி தரூர். இதில் "உலக அரங்கில் இந்தியாவின் முதன்மை சொத்து பிரதமர் நரேந்திர மோடி" என சசி தரூர் குறிப்பிட்டிருந்தார். இது காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு அல்ல என்பதை அக்கட்சியின் செய்தித்தொடர்பாளர் சுப்ரியா தெளிவுபடுத்தினார். சசி தரூரின் கட்டுரையை பிரதமர் அலுவலகம் பகிர்ந்திருந்தது கூடுதல் சர்ச்சையைக் கிளப்பியது. சசி தரூர் காங்கிரஸிலிருந்து விலகி பாஜகவில் இணைகிறாரா என்ற கேள்விகள் எழத் தொடங்கின.
சசி தரூர் செவ்வாயன்று இதற்கு விளக்கமளித்தார். மாஸ்கோவில் நடைபெற்ற நிகழச்சியொன்றில் பேசிய அவர், "என் கட்டுரை பாஜகவில் இணைவதற்கான அறிகுறி கிடையாது. தேச நலன், தேச ஒற்றுமைக்கான செய்தி" என்று சசி தரூர் கூறினார்.
இந்நிலையில், சசி தரூரின் கட்டுரை குறித்து காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கருத்து தெரிவித்துள்ளார். சசி தரூரின் கட்டுரை குறித்த கேள்விக்கு கார்கே பதிலளிக்கையில், "என்னால் ஆங்கிலம் வாசிக்க முடியாது. ஆனால், அவருடைய மொழி மிக அற்புதமானது. அதனால் தான் அவரை கட்சியின் செயற்குழு உறுப்பினராக்கினோம். ஆனால், ஒன்றைச் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். நாங்கள் எல்லோரும், ஒட்டுமொத்த எதிர்க்கட்சியும் ஒன்றிணைந்து ராணுவத்துடன் துணை நிற்கிறோம். நாங்கள் நாட்டுக்கு முன்னுரிமை என்கிறோம். சிலர் மோடிக்கு முன்னுரிமை அளித்து நாடு இரண்டாவது பட்சம் என்கிறார்கள். நம்மால் என்ன செய்ய முடியும்?" என்றார் கார்கே.
சசி தரூர் மீது நடவடிக்கை எடுக்க காங்கிரஸ் அஞ்சுகிறதா என்ற கேள்விக்கு, சசி தரூர் அவர் விருப்பப்படி பேசுகிறார் என்றார் கார்கே. நாட்டைக் காப்பாற்ற வேண்டும் என்பதில் தாங்கள் அதிக கவலை கொண்டிருப்பதாகவும் கார்கே கூறினார்.