ஆம் ஆத்மி எம்.பி. ஸ்வாதி மாலிவால் 
இந்தியா

ஸ்வாதி மாலிவால் வழக்கு: கெஜ்ரிவாலின் தனி உதவியாளர் கைது

கிழக்கு நியூஸ்

ஆம் ஆத்மி எம்.பி. ஸ்வாதி மாலிவால் தாக்கப்பட்ட வழக்கில், தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் தனி உதவியாளர் பிபவ் குமார் தில்லி காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலைச் சந்திப்பதற்காக அவரது இல்லத்துக்குக் கடந்த 13-ம் தேதி சென்ற ஆம் ஆத்மி எம்.பி. ஸ்வாதி மாலிவால், கெஜ்ரிவாலின் தனி உதவியாளர் பிபவ் குமாரால் தாக்கப்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. ஸ்வாதி மாலிவால் அன்றைய நாள் காவல் நிலையத்துக்குச் சென்றபோதிலும், அவர் முறையாகப் புகார் எதுவும் அளிக்கவில்லை.

இதன்பிறகு, ஸ்வாதி மாலிவால் அளித்த புகாரின் பேரில் தில்லி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தார்கள். முதல் தகவல் அறிக்கையில், ஆம் ஆத்மி எம்.பி. ஸ்வாதி மாலிவாலை பிபவ் குமார் 7, 8 முறை அறைந்ததாகவும், மார்பிலும், வயிற்றிலும், அவரை எட்டி உதைத்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிபவ் குமார் தரப்பில் ஸ்வாதி மாலிவால் மீது பதில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. அதில், முதல்வரின் சிவில் லைன்ஸ் இல்லத்துக்குள் ஸ்வாதி மாலிவால் அத்துமீறி நுழைந்ததாகவும், தன்னை இழிவாகப் பேசியதாகவும் பிபவ் குமார் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், தில்லி காவல் துறையினரால் பிபவ் குமார் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் தில்லி நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

பிபவ் குமார் தரப்பு வழக்கறிஞர் கரண் சர்மா கூறுகையில், "காவல் துறையிடமிருந்து இதுவரை எந்தத் தகவலும் எங்களுக்குக் கிடைக்கவில்லை. விசாரணைக்கு ஒத்துழைப்பு தருவதாக தில்லி காவல் துறைக்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ளோம்" என்றார்.