இந்தியா

ரூ. 3,000 கோடி நிதியுதவி: இந்திய அரசுக்கு மாலத்தீவு அதிபர் நன்றி

தற்போது நாங்கள் சந்தித்துவரும் அந்நிய செலவாணி பிரச்னைகளை தீர்க்க இந்த உதவி மிகவும் உபயோகமாக இருக்கும்.

ராம் அப்பண்ணசாமி

மாலத்தீவுக்கு ரூ. 3,000 கோடி நிதியுதவி அறிவித்த இந்திய அரசுக்கு நன்றி தெரிவித்து பிரதமர் மோடியுடனான சந்திப்பின்போது உரையாற்றியுள்ளார் மாலத்தீவு அதிபர் மொஹமத் முய்ஸு.

4 நாட்கள் அரசு முறைப்பயணமாக முதல்முறையாக இந்தியாவுக்கு நேற்று (அக்.07) வருகை தந்துள்ள மாலத்தீவு அதிபர் மொஹமத் முய்ஸுவுக்கு டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று வரவேற்பளித்தார் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு.

அதன் பிறகு டெல்லி ஹைதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்தினார் அதிபர் முய்ஸு. பிரதமர் மோடியுடனான இந்தப் பேச்சுவார்த்தைக்குப் பிறகு இரு நாட்டுத் தலைவர்களும் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

இதில் பேசிய அதிபர் முய்ஸு, `400 மில்லியன் அமெரிக்க டாலர்கள் பணப்பரிமாற்ற ஒப்பந்தத்துடன், ரூ. 3,000 கோடி நிதியுதவி வழங்க முடிவெடுத்த இந்திய அரசுக்கு நன்றி. தற்போது நாங்கள் சந்தித்துவரும் அந்நிய செலவாணி பிரச்னைகளை தீர்க்க இந்த உதவி மிகவும் உபயோகமாக இருக்கும்’ என்றார்.

இந்தியாவின் ரூபே தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி மாலத்தீவில் மேற்கொள்ளப்பட்ட முதல் பணப் பரிவர்த்தனையை பிரதமர் மோடியும், அதிபர் முய்ஸுவும் தொடங்கிவைத்தனர். மேலும் மாலத்தீவின் ஹனிமாதோ சர்வதேச விமான நிலையத்தின் ஓடுபாதையை இரு தலைவர்களும் கூட்டாக திறந்து வைத்தனர்.

கடந்த ஜூன் மாதம் தலைநகர் தில்லியில் நடந்த பிரதமர் நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவுக்கு வருகை தந்த அதிபர் முய்ஸு, இரண்டாவது முறையாக இந்தியாவுக்கு வருகை தந்துள்ளார்.