ஏக்நாத் ஷிண்டே (கோப்புப்படம்) ANI
இந்தியா

ஏக்நாத் ஷிண்டேவை நீக்கியது செல்லாது: மஹாராஷ்டிர பேரவைத் தலைவர்

கிழக்கு நியூஸ்

மஹாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவை நீக்க உத்தவ் தாக்கரேவுக்கு அதிகாரம் இல்லை என அந்த மாநிலத்தினுடைய சட்டப்பேரவைத் தலைவர் ராகுல் நார்வேகர் உத்தரவிட்டுள்ளார்.

மேலும், ஏக்நாத் ஷிண்டே தரப்பு சிவசேனைதான் உண்மையான சிவசேனை என்றும் அவர் அறிவித்துள்ளார்.

ஜூன் 2022-ல் அப்போதைய மஹாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக ஏக்நாத் ஷிண்டே மற்றும் எம்எல்ஏ-க்கள் பலர் போர்க்கொடி தூக்கினார்கள். சிவசேனையில் ஏற்பட்ட இந்த பிளவு காரணமாக சிவசேனை, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் இணைந்து ஆட்சியில் இருந்த மகா கூட்டணி அரசு கவிழ்ந்தது.

கட்சித் தாவல் தடைச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கக்கோரி ஏக்நாத் ஷிண்டே மற்றும் உத்தவ் தாக்கரே தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த மனுக்கள் மீது சட்டப்பேரவைத் தலைவர் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் கடந்தாண்டு உத்தரவிட்டது. ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அணிக்கு சிவசேனை என்றும், உத்தவ் தாக்கரே தலைமையிலான அணிக்கு உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவேசனை என்றும் கட்சிப் பெயர்களை வழங்கியது தேர்தல் ஆணையம்.

இந்த நிலையில், 18 மாதங்களுக்குப் பிறகு மஹாராஷ்டிர சட்டப்பேரவைத் தலைவர் உத்தரவு பிறப்பித்துள்ளார். தனது உத்தரவில் ஏக்நாத் ஷிண்டேவை கட்சியிலிருந்து நீக்க உத்தவ் தாக்கரேவுக்கு எந்த அதிகாரமும் கிடையாது என்றார். 55 சட்டப்பேரவை உறுப்பினர்களில் அதிருப்தி அணியாகக் கருதப்படும் ஏக்நாத் ஷிண்டே அணியில் 37 உறுப்பினர்கள் இருப்பதால் இந்த உத்தரவைப் பிறப்பிப்பதாக அவர் தெரிவித்தார். ஏக்நாத் ஷிண்டே மற்றும் அவரது தரப்பு சட்டப்பேரவை உறுப்பினர்களைத் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்ற உத்தவ் தாக்கரேவின் கோரிக்கையை சட்டப்பேரவைத் தலைவர் நிராகரித்துவிட்டார்.