கோப்புப்படம் 
இந்தியா

இளைஞர்களுக்கு ரூ. 6,000 முதல் 10,000 வரை உதவித் தொகை: மஹாராஷ்டிர அரசு

கிழக்கு நியூஸ்

இளைஞர்களுக்கு மாதந்தோறும் ரூ. 6 ஆயிரம் முதல் ரூ. 10 ஆயிரம் வரை உதவித்தொகை வழங்கப்படும் என மஹாராஷ்டிர அரசு அறிவித்துள்ளது.

மஹாராஷ்டிர மாநிலம் பந்தர்பூரில் நடைபெற்ற பொது நிகழ்ச்சியொன்றில் பேசிய முதல்வர் ஏக்நாத் ஷிண்டே இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

"12-ம் வகுப்பில் தேர்ச்சியடைந்தவர்களுக்கு மாதந்தோறும் ரூ. 6,000, தொழிற் கல்வி மற்றும் டிப்ளமோ முடித்தவர்களுக்கு மாதந்தோறும் ரூ. 8,000 மற்றும் பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு மாதந்தோறும் ரூ. 10,000 ஆயிரம் உதவித்தொகையாக வழங்கப்படவுள்ளது" என்றார் ஏக்நாத் ஷிண்டே.

பட்ஜெட் தாக்கலின்போது, அறிவிக்கப்பட்ட பல்வேறு நலத் திட்டங்களில், இந்தத் திட்டத்துக்கு மஹாராஷ்டிர அமைச்சரவை கடந்த திங்கள்கிழமை ஒப்புதல் அளித்துள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் 18 முதல் 35 வயதுடைய தகுதி வாய்ந்த இளைஞர்கள் கண்டறியப்பட்டு, அவர்களுக்கு 6 மாதம் திறன் மேம்பாட்டை அதிகரிப்பதற்கான தொழிற்பயிற்சி அளிக்கப்படவுள்ளது. 10 லட்சம் இளைஞர்கள் பயன்பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படும் இந்தத் திட்டத்துக்கு சுமார் ரூ. 10 ஆயிரம் கோடி செலவாகும் எனத் தெரிகிறது.

மஹாராஷ்டிரத்தில் பெண்களுக்கு மாதந்தோறும் ரூ. 1,500 வழங்கப்படும் என கடந்த மாதம் நிதிநிலை அறிக்கை தாக்கலின்போது அறிவிக்கப்பட்டது. சட்டப்பேரவைத் தேர்தல் வரவுள்ள நிலையில், ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அரசு அங்கு பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது.