கோப்புப்படம் ANI
இந்தியா

நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்: மஹாராஷ்டிர அரசு

கிழக்கு நியூஸ்

நடந்து முடிந்த நீட் தேர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என மஹாராஷ்டிர அரசு வலியுறுத்தியுள்ளது.

மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வை தேசிய தேர்வு முகமை நடத்துகிறது. கடந்த மே 5-ல் 4,750 மையங்களில் நடைபெற்ற நீட் தேர்வில் என்சிஇஆர்டி புத்தகங்களில் இடம்பெற்ற தவறான தகவல்களின் அடிப்படையில் மாணவர்கள் பதிலளித்த காரணத்தாலும், நேரம் வீணான காரணத்தாலும் கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளன.

இது பெரும் விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது. முன்னெப்போதும் இல்லாத வகையில் 67 மாணவர்கள் முழுமையாக 720 மதிப்பெண்களைப் பெற்றுள்ளார்கள். ஹரியாணாவில் குறிப்பிட்ட ஒரு மையத்திலிருந்து மட்டும் 6 பேர் 720 மதிப்பெண்களைப் பெற்றுள்ளார்கள்.

இதில் முறைகேடு நடந்திருப்பதாக மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் குற்றச்சாட்டை எழுப்பியுள்ளார்கள். தேசிய தேர்வு முகமை இதை மறுத்துள்ளது. இந்த விவகாரம் பூதாகரமானதைத் தொடர்ந்து, நீட் தேர்வு முடிவுகள் குறித்து மறு ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளதாக மத்திய உயர்கல்வித் துறைச் செயலர் சஞ்சய் மூர்த்தி இன்று அறிவித்தார்.

இந்த நிலையில், நடந்து முடிந்த நீட் தேர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என மஹாராஷ்டிர அரசு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக, மஹாராஷ்டிர மருத்துவக் கல்வித் துறை அமைச்சர் ஹாசன் முஷ்ரிஃப் கூறியதாவது:

"பணம் பெற்றுக்கொண்டு நீட் தேர்வு நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இந்த முடிவுகள் மஹாராஷ்டிரத்துக்கு அநீதியை இழைத்துள்ளது. மஹாராஷ்டிரத்தைச் சேர்ந்த எந்தவொரு மாணவராலும், அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரியில் மருத்துப் படிப்புக்குச் சேர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்தத் தேர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். தேசிய மருத்துவக் கவுன்சிலிடம் இதுகுறித்து வலியுறுத்தவுள்ளோம். இந்த விவகாரம் தொடர்பாக நீதிமன்றத்தை நாடுவது குறித்தும் சிந்தித்து வருகிறோம்" என்றார் அமைச்சர்.