பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடியுடன் அஜித் பவார்... ANI
இந்தியா

அஜித் பவாரின் ரூ. 1,000 கோடி மதிப்புடைய சொத்துகளை விடுவித்த வருமான வரித் துறை

மஹாராஷ்டிர துணை முதல்வராக அண்மையில் பொறுப்பேற்றுக் கொண்டார் அஜித் பவார்.

கிழக்கு நியூஸ்

பினாமி சொத்து வழக்கிலிருந்து மஹாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவார் மற்றும் அவருடையக் குடும்பத்தினரை வருமான வரி மேல்முறையீட்டுத் தீர்ப்பாயம் விடுவித்துள்ளது.

இதைத் தொடர்ந்து, ரூ. 1,000 கோடி மதிப்புடைய சொத்துகளும் வருமான வரித் துறையால் விடுவிக்கப்பட்டுள்ளன.

பினாமி சொத்துகள் என்ற குற்றச்சாட்டில் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ரூ. 1,000 கோடி மதிப்புடைய சொத்துகள் வருமான வரித் துறையால் பறிமுதல் செய்யப்பட்டன. ஜரண்டேஷ்வர் சர்க்கரை ஆலையிலும் வருமான வரித் துறை விசாரணை நடத்தியது. எம்எஸ்சிபி பணமோசடி வழக்கில் அமலாக்கத் துறை முன்பு சர்க்கரை ஆலை சொத்தை முடக்கியது.

ஜரண்டேஷ்வர் சர்க்கரை ஆலை வழக்கிலிருந்தும் அஜித் பவார் விடுவிக்கப்பட்டுள்ளார்.

அக்டோபர் 7, 2021-ல் பினாமி சொத்துகள் வைத்துள்ளதாக தேசியவாத காங்கிரஸ் தலைவர் அஜித் பவார் தொடர்புடைய இடங்களில் வருமான வரித் துறை சோதனை நடத்தியது. ரூ. 1,000 கோடி மதிப்புடைய சொத்துகள் வருமான வரித் துறையினரால் இணைக்கப்பட்டன.

இதுதொடர்புடைய விசாரணையின் முடிவில் எந்தவொரு சொத்தும் அஜித் பவாரின் பெயரில் பதிவு செய்யப்படவில்லை என்று தெரியவந்ததாகத் தெரிகிறது. பினாமி சொத்துகளைப் பெறுவதற்காக அஜித் பவார் அல்லது அவருடையக் குடும்பம் பணப் பரிமாற்றம் செய்ததாக எந்தவொரு ஆதாரமும் இல்லை என்று தீர்ப்பாயம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவற்றுக்கு மத்தியில் சரத் பவாரிடமிருந்து விலகிய அஜித் பவார், பாஜக - சிவசேனை (ஏக்நாத் ஷிண்டே தரப்பு) கூட்டணி ஆட்சியில் இணைந்து துணை முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

நடந்து முடிந்த மஹாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக, சிவசேனை (ஏக்நாத் ஷிண்டே), தேசியவாத காங்கிரஸ் (அஜித் பவார்) இணைந்து போட்டியிட்டு ஆட்சியைப் பிடித்துள்ளன. அஜித் பவார் மீண்டும் துணை முதல்வராகப் பொறுப்பேற்றுள்ளார். இந்தச் சூழலில் தான் பினாமி சொத்து வழக்கிலிருந்து அஜித் பவார் மற்றும் அவருடையக் குடும்பத்தினர் விடுவிக்கப்பட்டுள்ளார்கள்.

இந்த உத்தரவைத் தொடர்ந்து ரூ. 1,000 கோடி மதிப்புடைய சொத்துகள் வருமான வரித் துறையால் விடுவிக்கப்பட்டுள்ளது.