கோவையில் பிரதமர் பேரணிக்கு அனுமதி ANI
இந்தியா

கோவையில் பிரதமர் பேரணிக்கு அனுமதி: சென்னை உயர் நீதிமன்றம்

பிரதமர் மோடியின் வாகனப் பேரணிக்கு அனுமதி வழங்கக் கோரி பாஜகவினர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்கள்.

யோகேஷ் குமார்

கோவையில் வருகிற 18 அன்று பிரதமர் மோடி பங்கேற்க உள்ள பாஜகவின் வாகனப் பேரணிக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளார் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்.

பிரதமர் மோடி இன்று கன்னியாகுமரி அருகே உள்ள அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார்.

இந்த வருடம் 5-வது முறையாக தமிழ்நாட்டுக்கு வந்துள்ள மோடி, வருகிற 18 அன்று கோவைக்குச் செல்கிறார்.

கோவையில் பிரம்மாண்ட வாகன அணிவகுப்புப் பேரணியில் பிரதமர் கலந்து கொள்வார் என அறிவிக்கப்பட்ட நிலையில் மோடியின் வாகனப் பேரணிக்கு காவல் துறை அனுமதி மறுத்தது.

இதுவரை கோவையில் இதுபோன்ற வாகனப் பேரணிக்கு அனுமதி அளித்தது கிடையாது என்றும், பள்ளி மாணவர்களின் தேர்வுகளை கருத்தில் கொண்டும் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகக் காவல் துறை விளக்கம் அளித்தது.

இந்நிலையில் பிரதமர் மோடியின் வாகனப் பேரணிக்கு அனுமதி வழங்கக் கோரி பாஜகவினர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், கோவையில் பிரதமர் மோடியின் பேரணிக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளார்.