வாரத்துக்கு 90 மணி நேரம் வேலை பார்க்க வேண்டும் என்ற எல் அண்ட் டி நிறுவனத்தின் தலைவர் எஸ்எஸ் சுப்பிரமணியன் கருத்துக்கு நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் விளக்கமளித்துள்ளார்.
லார்சன் அண்ட் டர்போ (எல் அண்ட் டி) நிறுவனத்தின் தலைவர் எஸ்என் சுப்பிரமணியன் ஊழியர்கள் வாரத்துக்கு 90 மணி நேரம் வேலை பார்க்க வேண்டும் என்ற கருத்தைத் தெரிவித்தது சர்ச்சையானது. ஊழியர்களை ஞாயிற்றுக்கிழமையும் வேலை பார்க்க வைக்க முடியவில்லை என்பது வருத்தமாக இருப்பதாக எஸ்என் சுப்பிரமணியன் தெரிவித்தார்.
இதுதொடர்பாக வெளியான காணொளியில், ஊழியர்கள் சனிக்கிழமையும் வேலை பார்க்க வேண்டும் என எல் அண்ட் டி நிறுவனம் விரும்புவது தொடர்பாகக் கேட்கப்பட்டது. அதில், "உண்மையைச் சொல்ல வேண்டுமெனில் ஊழியர்களை ஞாயிற்றுக்கிழமையும் வேலை பார்க்க வைக்க முடியவில்லை என்ற வருத்தம் எனக்கு உள்ளது. ஞாயிற்றுக்கிழமையும் வேலை பார்க்க வைக்க முடிந்தால், அது எனக்கு மகிழ்ச்சியே. காரணம், நான் ஞாயிற்றுக்கிழமைகளிலும் வேலை பார்க்கிறேன்.
வீட்டிலிருந்து என்ன செய்கிறீர்கள்? எவ்வளவு நேரம் தான் மனைவியையே பார்த்துக் கொண்டிருக்கப் போகிறீர்கள்? எவ்வளவு நேரம் தான் மனைவிகளால் கணவர்களை பார்த்துக் கொண்டிருக்க முடியும்? அலுவலகம் வந்து வேலை பாருங்கள்.
சீனர்கள் வாரத்துக்கு 90 மணி நேரம் வேலை பார்ப்பார்கள். அமெரிக்கர்கள் வாரத்துக்கு 50 மணி நேரம் மட்டுமே வேலை பார்ப்பார்கள். மிகத் தீவிரமான வேலை பார்க்கும் திறனால், அமெரிக்காவை சீனா பின்னக்குத் தள்ளும் என சீனர் ஒருவர் தெரிவித்தார்.
உலகின் முன்னணியில் இருக்க வேண்டும் என்றால், நீங்கள் வாரத்துக்கு 90 மணி நேரம் வேலை பார்த்தாக வேண்டும்" என்றார் எஸ்என் சுப்பிரமணியன்.
இவருடையக் கருத்து சமூக ஊடகங்களில் பேசுபொருளானது. முக்கியப் பொறுப்புகளில் உள்ளவர்கள் இதுமாதிரியான கருத்துகளை முன்வைப்பது அதிர்ச்சியளிக்கிறது என நடிகை தீபிகா படுகோன் இன்ஸ்டகிராமில் பதிவிட்டிருந்தார். இந்தப் பதிவுடன் மனநலம் முக்கியம் என்றும் தீபிகா படுகோன் குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில், எல் அண்ட் டி நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் எஸ்எஸ் சுப்பிரமணியத்தின் கருத்து குறித்து விளக்கமளித்துள்ளார். "மிகப் பெரிய இலக்கின் பிரதிபலிப்பு தான் எல் அண்ட் டி தலைவரின் பார்வை. அசாத்தியமான சாதனைகளைப் புரிய அசாத்தியமான முயற்சிகள் தேவை. பேரார்வமும், நோக்கமும், செயல்பாடும்தான் நம்மை முன்னோக்கி எடுத்துச் செல்லும் எனும் கலாசாரத்தை மேம்படுத்துவதில் நாங்கள் உறுதி கொண்டுள்ளோம்" என்று எல் அண்ட் டி நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் தெளிவுபடுத்தியுள்ளார்.