ANI
இந்தியா

பசுவதை செய்பவர்களைத் தலைகீழாகத் தொங்கவிடுவோம்: அமித் ஷா

கிழக்கு நியூஸ்

பிஹாரில் பசுவதை செய்பவர்களைத் தலைகீழாகத் தொங்கவிடுவோம் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

பிஹார் மாநிலம் மதுபனியில் பாஜகவின் தேர்தல் பொதுக்கூட்டம் இன்று கூடியது. இதில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்துகொண்டு பாஜகவுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார்.

இண்டியா கூட்டணியை கௌரவர்களுடனும், தேசிய ஜனநாயகக் கூட்டணியை பாண்டவர்களுடனும் ஒப்பிட்டு அமித் ஷா பிரசாரம் செய்தார். இதே கூட்டத்தில் பசுவதை செய்பவர்களை தலைகீழாகத் தொங்கவிடுவோம் என்றும் இவர் ஆவேசமாகப் பேசினார்.

"பசுவதை சம்பவங்கள் இந்தப் பகுதியில்தான் அதிகளவில் நடக்கின்றன. பிரதமர் நரேந்திர மோடியை மூன்றாவது முறையாகப் பிரதமராக்குங்கள். பசுவதை செய்பவர்களைத் தலைகீழாகத் தொங்கவிடுவோம் என்று உறுதியளிக்கிறேன். இது சீதையின் மண். இங்கு பசுவதை செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. இதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம். இதுதான் நரேந்திர மோடியின் வாக்குறுதி" என்றார் அமித் ஷா.

மதுபனியில் பாஜக சார்பில் அசோக் குமார் யாதவ் போட்டியிடுகிறார். பிஹாரில் மொத்தமுள்ள 40 தொகுதிகளுக்கும் 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 2019 மக்களவைத் தேர்தலில் 39 இடங்களில் பாஜக வெற்றி பெற்றது. ஒரு இடத்தில் காங்கிரஸ் வெற்றி பெற்றது.