படம்: https://twitter.com/BJP4India
இந்தியா

இந்தியாவின் சிந்தனை, நம்பிக்கை, பெருமை அனைத்தும் ராமர்தான்: பிரதமர் மோடி

"ராமர் இனி கூடாரத்தில் வாழ மாட்டார். பிரமாண்டமான கோயிலில் வசிக்கவுள்ளார்."

கிழக்கு நியூஸ்

அயோத்தியில் கோயில் பணிகள் நிறைவடைந்ததன் மூலம் கடவுள் ராமர் நம்மை மன்னித்து விடுவார் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

உத்தரப் பிரதேசம் அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவைத் தொடர்ந்து பிரதமர் மோடி பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றினார்.

அவர் பேசியதாவது:

"ராமர் இனி கூடாரத்தில் வாழ மாட்டார். பிரமாண்டமான கோயிலில் வசிக்கவுள்ளார். ஜனவரி 22 சூரிய உதயம் அற்புதமான ஓர் ஒளிக்கதிரைக் கொண்டு வந்துள்ளது. ஜனவரி 22, 2024 என்பது காலெண்டரில் எழுதப்பட்டுள்ள வெறும் தேதியல்ல. புதிய காலச் சக்கரத்துக்கான ஒரு தொடக்கம்.

கடவுள் ராமரிடம் நானும் இன்று மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். எங்களுடைய முயற்சியிலும், தியாகத்திலும் ஏதோ குறைபாடு இருந்திருக்கிறது. இதன் காரணமாகத்தான் இந்தப் பணிகள் நடைபெறுவதற்கு இத்தனை நூற்றாண்டுகள் ஆகியிருக்கிறது. இன்று பணிகள் முழுவதுமாக நிறைவடைந்துள்ளன. கடவுள் ராமர் நம்மை இன்று நிச்சயமாக மன்னித்துவிடுவார்.

கடவுள் ராமரின் இருப்பு மீதான சட்டப் போராட்டம் பல பத்து ஆண்டுகளுக்கு நீடித்தது. நீதியைத் தந்ததற்கு இந்திய நீதித் துறைக்கு எனது நன்றியுணர்வை வெளிப்படுத்துகிறேன்.

இந்தக் கோயில் என்பது ராமரின் வடிவிலான ஒரு தேசிய உணர்வு. ராமர் இந்தியாவின் நம்பிக்கை. ராமர்தான் இந்தியாவின் அடித்தளமே. இந்தியாவின் சிந்தனையும் ராமர். இந்தியாவினுடைய சட்டமும் ராமர்தான். இந்தியாவின் பெருமை ராமர். இந்தியாவின் தலைமையும், கொள்கையும் ராமர். ராமர் கௌரவிக்கப்பட்டால், அதன் தாக்கம் வெறும் நூற்றாண்டுகளுக்கு மட்டும் அல்ல, பல ஆயிரம் ஆண்டுகளுக்கு நீடிக்கும்."