இந்தியா

ராணுவத்தின் கைகளைக் கட்டிப்போட்ட அரசியல் தலைமை: ஆபரேஷன் சிந்தூர் பற்றி ராகுல் காந்தி உரை! | Operation Sindoor

"பிரதமரின் பிம்பத்தைப் பாதுகாக்க வேண்டும் என்பதுதான் இலக்கு."

கிழக்கு நியூஸ்

ஆபரேஷன் சிந்தூரின்போது, அரசியல் தலைமை ராணுவத்தின் கைகளைக் கட்டிப்போட்டதாக ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

ஆபரேஷன் சிந்தூர் குறித்து நாடாளுமன்றத்தில் கடந்த இரு நாள்களாக விவாதம் நடைபெற்று வருகிறது. மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்ஷங்கர், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோர் ஆபரேஷன் சிந்தூர் பற்றி உரையாற்றினார்கள்.

எதிர்க்கட்சிகள் சார்பில் பிரியங்கா காந்தி, கனிமொழி, ஆ. ராசா உள்ளிட்டோர் உரையாற்றினார்கள். இவர்களுடைய வரிசையில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இன்று உரையாற்றினார்.

"பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு, எதிர்க்கட்சிகள் ஒற்றுமையுடன் இருந்தன. இந்தியப் படைகள் மற்றும் அரசுக்கு ஆதரவாக இருந்தன.

ஆபரேஷன் சிந்தூர் அதிகாலை 1.05 மணிக்குத் தொடங்கியது. 22 நிமிடங்கள் ஆபரேஷன் நீடித்தது. அதிகாலை 1.35 மணிக்கு பாகிஸ்தானை அழைத்து ராணுவ இலக்குகள் எதுவும் குறிவைக்கப்படவில்லை என்பதை நாம் தெரிவித்திருக்கிறோம். சண்டைக்கு நடுவே நம் வியூகத்தை எதற்காக வெளியிட வேண்டும்? நீங்கள் வெறும் தாக்குதலை மட்டும் நடத்தவில்லை. நம் வரம்பு என்ன என்பதையும் காட்டியுள்ளீர்கள்.

போர் விமானங்களை இழந்ததாக இந்திய விமானப் படை கூறுகிறது. ராணுவ இலக்குகளைக் குறிவைக்க அரசியல் தலைமை கட்டுப்பாடு விதித்ததால் இது நேர்ந்தது. சண்டைக்கு நடுவே அவர்களுடைய கைகளைக் கட்டியுள்ளீர்கள்.

நீங்கள் எந்தத் தவறையும் செய்யவில்லை என்பதை முப்படைகளுக்கான தலைமைத் தளபதி அனில் சௌஹானிடம் தெரிவித்துக் கொள்கிறேன். அரசியல் தலைமை தான் ராணுவத்தின் கைகளைக் கட்டிப்போட்டிருக்கிறது. ஒட்டுமொத்த செயல்பாடுகளின் இலக்கே பிரதமரின் பிம்பத்தைப் பாதுகாக்க வேண்டும் என்பதுதான்.

இந்திரா காந்திக்கு இருந்த துணிச்சலில் பாதி இருந்தால் கூட, பிரதமர் மோடி நாடாளுமன்றத்துக்கு வந்து, நாம் எந்தப் போர் விமானத்தையும் இழக்கவில்லை, சண்டையை டிரம்ப் நிறுத்தவில்லை என்பதைக் கூற வேண்டும்.

அனைவரும் பயங்கரவாதத்துக்குக் கண்டனம் தெரிவித்தார்கள். ஆனால், ஒரு நாடு கூட பாகிஸ்தானுக்குக் கண்டனம் தெரிவிக்கவில்லை. பாகிஸ்தானின் ராணுவத் தளபதி டிரம்புடன் மதிய உணவு அருந்துகிறார்.

ஆபரேஷன் முழுமையாக நிறைவடையவில்லை. ஆனால், அதற்குள் வெற்றி என்று அறிவிக்கப்பட்டது. வெளியுறவுக் கொள்கையில் இந்தியாவுக்கு இருக்கும் பெரிய சவாலே சீனாவையும் பாகிஸ்தானையும் பிரித்து வைத்திருக்க வேண்டும் என்பதுதான். இதை நான் முன்கூட்டியே எச்சரித்திருக்கிறேன். ஆனால், இந்த அரசு இரு நாடுகளையும் ஒன்றிணைத்துள்ளது.

பெரிய பொருளாதாரத்தைக் கொண்டுள்ள நாடு என்பதால் சீனாவிடம் சண்டையிட மாட்டோம் என ஜெய்ஷங்கர் கூறுகிறார். இது வியூகம் அல்ல, அச்சத்தின் வெளிப்பாடு" என்றார் ராகுல் காந்தி.

Operation Sindoor | Rahul Gandhi | Parliament | Lok Sabha