இந்தியா

ஜனநாயகத்தை அழிப்பவர்களைத் தலைமைத் தேர்தல் ஆணையர் காப்பாற்றுகிறார்: ராகுல் காந்தி | Rahul Gandhi |

இந்தியாவில் ஜனநாயம் இருக்கிறது என்ற எண்ணமே திருடப்படுகிறது என்றும் பேச்சு...

கிழக்கு நியூஸ்

ஜனநாயகத்தை அழிப்பவர்களைத் தலைமைத் தேர்தல் ஆணையர் காப்பாற்றுகிறார் என ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

காங்கிரஸ் மூத்த தலைவரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி செப்டம்பர் 18 அன்று காலை 10 மணிக்குச் செய்தியாளர்களைச் சந்திப்பார் என காங்கிரஸ் தரப்பில் அதிகாரபூர்வமாக நேற்று (புதன்கிழமை) அறிவிக்கப்பட்டது.

வாக்குத் திருட்டு குறித்து தேர்தல் ஆணையம் மற்றும் பாஜக மீது தொடர்ந்து கடுமையான குற்றச்சாட்டுகளை வைத்து வருகிறார் ராகுல் காந்தி. கடந்த மாதம் செய்தியாளர்களைச் சந்தித்து வாக்குத் திருட்டு நடைபெறுவது எப்படி என நாட்டு மக்களிடம் விளக்கமளித்தார். கர்நாடகத்தில் மஹாதேவபுரா சட்டப்பேரவைத் தொகுதியை உதாரணமாகக் கொண்டு அங்கு எப்படி வாக்குகள் திருடப்பட்டன என்பதைத் தரவுகள் மூலம் குற்றச்சாட்டாக வைத்தார்.

பிஹார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தைக் கடுமையாக விமர்சித்த ராகுல் காந்தி, தேர்தல் ஆணையம் வரவு வாக்காளர் பட்டியலில் விடுபட்டவர்களை அழைத்து அவர்களுடன் தேநீர் அருந்தி தேர்தல் ஆணையத்தை விமர்சித்திருந்தார்.

மேலும், வாக்குத் திருட்டு குறித்து தொடர்ச்சியாகப் பேசி வந்த ராகுல் காந்தி, "அணுகுண்டைவிட பெரிய குண்டைக் கேள்விப்பட்டுள்ளீர்களா, அது தான் ஹைட்ரஜன் குண்டு. ஹைட்ரஜன் குண்டு வருகிறது. பாஜக மக்களே தயாராக இருங்கள்" என்று அண்மையில் கூறியிருந்தார். வாக்குத் திருட்டு குறித்த ஹைட்ரஜன் குண்டை நாங்கள் வெளிக்கொண்டு வந்த பிறகு பிரதமர் நரேந்திர மோடியால் முகத்தை வெளியில் காட்ட முடியாது என்றும் ராகுல் காந்தி கூறியிருந்தார். இந்த நிலையில் தான் ராகுல் காந்தி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.

இந்நிலையில், இன்று (செப். 18) மீண்டும் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது -

"முதலில், இது ஹைட்ரஜன் குண்டு கிடையாது. ஹைட்ரஜன் குண்டு வருகிறது. தேர்தல்களில் எப்படி மோசடி செய்யப்படுகிறது என்பதை நாட்டு இளைஞர்களிடத்தில் எடுத்து விவரிப்பதற்கான மேலும் ஒரு மைல்கல் இது. நூறு சதவீதம் உண்மை அல்லாத விஷயத்தை நான் இங்கே பேசப்போவதில்லை. நாட்டையும், அரசியலமைப்பையும், ஜனநாயக அமைப்பையும் நேசிப்பவன் நான். அதன் வழிவகைகளை நான் காப்பாற்ற விரும்புகிறேன். ஆதாரமற்ற தகவல் எதையும் நான் இங்கு வெளியிடப் போவதில்லை.

இந்தியாவின் தலைமைத் தேர்தல் ஆணையர், நாட்டில் ஜனநாயகத்தை அழித்தவர்களைப் பாதுகாக்கிறார்.

கர்நாடகத்தின் ஆலந்த் தொகுதியில் 2023-ல் நடந்த தேர்தலில் 6,018 வாக்குகள் நீக்கப்பட்டன. நீக்கியவர் யார் என்பதைத் தற்செயலாகக் கண்டு பிடித்தார்கள். அவரிடம் விசாரித்தபோது தான் எந்த வாக்கையும் நீக்கவில்லை என்று கூறினார். பின் எப்படி அவர் மூலமாக வாக்குகள் நீக்கப்பட்டன? வேறு எங்கிருந்தோ யாரோ வாக்குகளை நீக்கியுள்ளனர்.

அத்தொகுதியில் 6,018 விண்ணப்பங்கள் போலியான அடையாளங்களைக் கொண்டு நிரப்பப்பட்டுள்ளன. அவற்றில் கொடுக்கப்பட்டுள்ள தொடர்பு எண்கள் அனைத்தும் கர்நாடகத்திற்கு வெளியில் உள்ளதாகவும். வெவ்வேறு மாநிலங்களைச் சேர்ந்த தொடர்பு எண்களைப் பயன்படுத்தி வாக்குகளை நீக்கியுள்ளனர். அவை எல்லாம் காங்கிரஸுக்கு வாக்களிக்கும் வாக்காளர்களைக் குறி வைத்து நடத்தப்பட்டன.

வாக்கு நீக்கப்படுவது எப்படி நடக்கிறது என்று பார்ப்போம். இது மத்திய அளவில் மென்பொருள்களைப் பயன்படுத்தி நடத்தப்படுகிறது. சீரியல் எண்கள்களைக் கவனித்தால், வாக்குச் சாவடிகளின் பெயர்களை மென்பொருள் தேர்ந்தெடுத்து வாக்குகளைத் தானியங்கியாக நீக்குவது தெரியும். முதல் வாக்கு அளிப்பவரின் அடையாளங்களைப் பயன்படுத்தி வாக்குகளை நீக்கியுள்ளார்கள். அப்படி ஒரு மென்பொருள் வடிவமைப்பைச் செய்திருக்கிறார்கள்.

நான் ஏன் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மீது இத்தகைய குற்றச்சாட்டுகளை வைக்கிறேன் என்றால், வாக்குத் திருட்டு தொடர்பாக கர்நாடகத்தின் சிஐடி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். தலைமைத் தேர்தல் ஆணையருக்கு 18 மாதங்களில் 18 முறை கடிதம் அனுப்பப்பட்டிருக்கிறது. அதில், விண்ணப்பங்கள் நிரப்பப்பட்ட கணினியின் ஐபி முகவரியைக் கொடுங்கள். அவை நிரப்பப்பட்ட கணினிகளைக் காட்டுங்கள். மேலும் முக்கியமாக, விண்ணப்பங்கள் நிரப்பப்பட்டவுடன் வந்த ஓடிபிக்களைக் காட்டுங்கள் என்பது போன்ற சுலபமான தகவல்களையே கேட்டு, 18 முறை கடிதம் அனுப்பியுள்ளனர். ஆனால், இன்னும் அதற்கான பதில்கள் கிடைக்கவில்லை. அவை கிடைத்துவிட்டால் நாம் நினைத்தது நடந்துவிடும் என்பதால் தர மறுக்கிறார்கள்.

நான் என் வேலையாக இதைச் செய்யவில்லை. என் வேலை ஜனநாயக அமைப்பில் பங்கெடுப்பதுதான். அதைப் பாதுகாப்பது அல்ல. அதைச் செய்ய வேண்டியது அரசியல் அமைப்புகள்தான். ஆனால் அவை செய்ய மறுப்பதால் நான் செய்கிறேன். இன்னும் 2,3 மாதங்களில் ஒவ்வொரு மாநிலத்திலும் வாக்குத் திருட்டு நடந்திருக்கிறது என்பது சந்தேகம் இன்றி உறுதி ஆகும்.”

இவ்வாறு பேசினார்.