பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு லுக் அவுட் நோட்டீஸ் 
இந்தியா

ஆபாசக் காணொளி விவகாரம்: பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு லுக் அவுட் நோட்டீஸ்

யோகேஷ் குமார்

ஆபாசக் காணொளி விவகாரத்தில் பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு லுக் அவுட் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

மதச்சார்பற்ற ஜனதா தளத் தலைவர் தேவெகௌடாவின் பேரன் பிரஜ்வல் ரேவண்ணா எம்.பி. தொடர்புடைய ஏராளமான ஆபாசக் காணொளிகள் முதற்கட்ட வாக்குப்பதிவுக்கு முன்பிலிருந்து இணையத்தில் வைரலாகி வருகின்றன. இந்தக் காணொளி விவகாரம் குறித்து விசாரிக்க கர்நாடக காங்கிரஸ் அரசு சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்தது.

இதனிடையே, பிரஜ்வல் ரேவண்ணா வீட்டில் முன்பு பணிபுரிந்த பெண் பணியாளர் அளித்த புகாரின் பெயரில் பிரஜ்வல் ரேவண்ணா மீது கர்நாடக காவல் துறையினர் பாலியல் வன்கொடுமை குற்றத்துக்கு வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் தேவெகௌடாவின் மகன் ஹெச்டி ரேவண்ணா மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் பிரஜ்வல் ஜெர்மனிக்குச் சென்றதாக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகின. இதைத் தொடர்ந்து, உண்மை விரைவில் வெல்லும் என அவர் எக்ஸ் தளப் பக்கத்தில் குறிப்பிட்டார்.

பிரஜ்வலின் எக்ஸ் தளப் பதிவு:

"நான் பெங்களூருவில் இல்லை. எனவே, என்னால் விசாரணைக்கு ஆஜராக முடியாது. இதுதொடர்பாக, எனது வழக்கறிஞர் மூலம் பெங்களூரு சிஐடியிடம் தகவல் தெரிவித்துள்ளேன். உண்மை விரைவில் வெல்லும்" என பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்து வரும் சிறப்பு புலனாய்வு குழுவினர், பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர். அதன்படி, இந்தியா முழுவதும் உள்ள விமான நிலையங்கள், துறைமுகங்களில் அவருக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.