நடப்பாண்டிற்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது மக்களவைச் செயலகம்.
மக்களவைச் செயலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது,
`18-வது மக்களவையின் 4-வது கூட்டத்தொடர் (பட்ஜெட் கூட்டத்தொடர்) வரும் 31 ஜனவரி 2025-ல் தொடங்குகிறது. அரசு அலுவல்களைக் கருத்தில்கொண்டு வரும் ஏப்ரல் 4-ல் கூட்டத்தொடர் நிறைவுபெற வாய்ப்புள்ளது.
31 ஜனவரி 2025-ல் புது தில்லி, நாடாளுமன்ற வளாகத்தில் அமைந்துள்ள மக்களவையில், இரு அவை உறுப்பினர்களுக்கு முன்பு குடியரசுத் தலைவர் உரை நிகழ்த்துவார்’.
மக்களவைச் செயலகம் வெளியிட்டுள்ள மற்றொரு அறிவிப்பில், ஜன.31 அன்று காலை 11 மணி அளவில் குடியரசுத் தலைவர் உரை நிகழ்த்தவுள்ளதாகவும், குடியரசுத் தலைவரின் உரை நிறைவுபெற்று அரை மணிநேரம் கழித்து, அரசு அலுவல்கள் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இதைத் தொடர்ந்து குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதமும், அதனைத் தொடர்ந்து மத்திய பட்ஜெட் தாக்கலும் அதன் மீதான விவாதமும் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக பிப்ரவரி 1, 3, 4, 6, 7, 10, 11 மற்றும் 13 ஆகிய தேதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
பிப்ரவரி 13-ல் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டு, மீண்டும் மார்ச் 10-ல் கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இடைப்பட்ட காலத்தில் மானியக் கோரிக்கைகள் தொடர்பான நாடாளுமன்ற நிலைக்குழுக் கூட்டங்கள் நடைபெறும்.