ANI
இந்தியா

இரண்டாம் கட்டத் தேர்தல்: வாக்களித்த பின் அரசியல் தலைவர்கள் சொல்வதென்ன?

கிழக்கு நியூஸ்

மக்களவைத் தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு 13 மாநிலங்களில் 88 தொகுதிகளில் நடைபெற்று வருகிறது. பகல் 1 மணி நிலவரப்படி 39.1% வாக்குகள் பதிவாகியுள்ளன.

அரசியல் கட்சித் தலைவர்கள், திரைப் பிரபலங்கள், கிரிக்கெட் வீரர்கள் உள்ளிட்டோர் வாக்களித்து வருகிறார்கள்.

கேரள முதல்வர் பினராயி விஜயன் கண்ணூரில் வாக்குச் சாவடி எண் 161-ல் தனது வாக்கை செலுத்தினார்.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பெங்களூருவில் வாக்களித்தார்.

"நிறைய மக்கள் வாக்களிக்க வர வேண்டும். நிலையான அரசு, நல்ல கொள்கைகள் மற்றும் வளர்ச்சி தேவை என்பதில் மக்கள் தெளிவாக உள்ளார்கள். அதனால்தான் அனைவரும் வாக்களிக்க வருகிறார்கள். பிரதமர் மோடி அவருடைய ஆட்சியைத் தொடர வேண்டும் என்பதை மக்கள் விரும்புகிறார்கள்" என்றார் நிர்மலா சீதாராமன்.

கேரள எதிர்க்கட்சித் தலைவர் விடி சதீசன் எர்ணாகுளத்தில் வாக்களித்தார்.

"எங்களுடைய கணிப்பின்படி அனைத்து 20 தொகுதிகளிலும் நாங்கள் வெற்றி பெறுவோம். மாநில மற்றும் மத்திய அரசுக்கு எதிரான போக்கு அமைதியாக நிலவுகிறது. காங்கிரஸ் தலைமையிலான இண்டியா கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வரும்" என்றார் அவர்.

திரிச்சூரில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் போட்டியிடும் சுரேஷ் கோபி திரிச்சூரில் உள்ள வாக்குச் சாவடியில் வாக்கை செலுத்தினார்.

வாக்களித்த பிறகு, "நாட்டின் வளர்ச்சியில் கேரளத்தின் பங்கு இருக்கப்போகிறது" என்றார் சுரேஷ் கோபி.

காங்கிரஸ் பொதுச்செயலாளரும், ஆலப்புழா காங்கிரஸ் வேட்பாளருமான கே.சி. வேணுகோபால் தனது வாக்கை செலுத்தினார்.

"ஆலப்புழா மக்கள் என்னுடன் துணை நிற்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. முதற்கட்ட வாக்குப்பதிவுக்குப் பிறகு பிரதமர் பதற்றமடைகிறார். காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை பொதுமக்கள் பார்வைக்குக் கொண்டு வருவதற்காக பிரதமருக்கு நன்றி. கேரளத்தில் ஐக்கிய ஜனநாயக முன்னணி அனைத்து 20 இடங்களிலும் வெற்றி பெறும். கேரள மக்கள் ராகுல் காந்தியுடன் துணை நிற்கிறார்கள் என்பதை வயநாடு மக்கள் உறுதி செய்யவுள்ளார்கள்" என்றார் வேணுகோபால்.

ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் அசோக் கெலாட் ஜோத்பூரில் வாக்களித்தார்.

"ராஜஸ்தானில் காங்கிரஸ் இரட்டை இலக்கத்தில் வெற்றி பெறும் என நினைக்கிறோம். ஜனநாயகத்தை வலுப்படுத்த, மக்கள் பெருமளவில் வாக்களிக்க வேண்டும். இது ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்கான தேர்தல்" என்றார் அசோக் கெலாட்.

முன்னாள் பிரதமரும், மதச்சார்பற்ற ஜனதா தளம் தலைவருமான தேவெகௌடா ஹாசனில் தனது வாக்கை செலுத்தினார்.

கர்நாடகத்தில் பாஜக, மதச்சார்பற்ற ஜனதா தளம் 14 இடங்களிலும் வெற்றி பெறவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இவருடைய மகனும், மாண்டியா வேட்பாளருமான குமாரசாமியும் இதே கருத்தைத் தெரிவித்தார்.

திருவனந்தபுரத்தில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் சசி தரூர் வாக்களித்தார்.

"எனது எதிர்காலத்தைக் காட்டிலும், நாட்டின் எதிர்காலத்துக்கான தேர்தல் இது. தில்லியில் ஆட்சியை மாற்றுவதற்கான தேர்தல். ஜனநாயகத்தை, பன்முகத்தன்மையைக் காக்க வேண்டும். பாஜகவுக்கு எதிரான நிலைப்பாடு என்று இடதுசாரிகளும் கூறி வருகிறார்கள். ஆனால், பாஜகவுக்கு எதிராக ஒரு வார்த்தையைக் கூட அவர்கள் பேசவில்லை" என்றார் சசி தரூர்.