இந்தியா

தேர்தல் முடிவுகள் அறிவிப்பு: பாஜக, காங்கிரஸ் கூட்டணிகள் இன்று ஆலோசனை

கிழக்கு நியூஸ்

மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை முழுமையாக நிறைவடைந்துள்ளது. பாஜக தனித்து 240 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் 99 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது.

ஆட்சி அமைப்பதற்குத் தேவையான பெரும்பான்மையை தேசிய ஜனநாயகக் கூட்டணி பெற்றுள்ளது. நிதிஷ் குமார், சந்திரபாபு நாயுடு தேசிய ஜனநாயகக் கூட்டணியில் வலிமையானவர்களாக மாறியுள்ளார்கள். இவர்கள் இருவரும் இதற்கு முன்பு காங்கிரஸ் கூட்டணியில் அங்கம் வகித்துள்ளார்கள். எனவே, இவர்களை இண்டியா கூட்டணிக்கு இழுப்பது குறித்து பேச்சுவார்த்தைகள் நடத்தப்படுமா என காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியிடம் செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினார்கள்.

இதற்கு, இண்டியா கூட்டணித் தலைவர்களுடனான ஆலோசனை இன்று நடைபெறுகிறது. அவர்களுடன் ஆலோசனை நடத்துவதற்கு முன்பு இதுபற்றி ஊடகங்களுக்கு நாங்கள் கருத்து தெரிவிப்பது சரியாக இருக்காது என்று கூறினார்.

பாஜக தலைமையகத்தில் தொண்டர்கள் மத்தியில் பேசிய பிரதமர் மோடி, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியமைக்கிறது என்றார். 60 ஆண்டுகளுக்குப் பிறகு புதிய வரலாறு படைத்துள்ளதாகப் பேசிய அவர், பாஜக மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணி மீது நம்பிக்கை வைத்த மக்களுக்கு நன்றி தெரிவிப்பதாகக் கூறினார்.

இந்த நிலையில், ஆட்சியமைப்பது குறித்து தேசிய ஜனநாயகக் கூட்டணித் தலைவர்கள் தில்லியில் இன்று மாலை 4 மணிக்கு ஆலோசனை நடத்துகிறார்கள். இந்த ஆலோசனையில் ஐக்கிய ஜனதா தளத் தலைவர் நிதிஷ் குமார், தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு உள்ளிட்டோரும் கலந்துகொள்ளவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களும் இந்த ஆலோசனையில் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இண்டியா கூட்டணித் தலைவர்களும் தில்லியிலுள்ள மல்லிகார்ஜுன கார்கே இல்லத்தில் இன்று மாலை 6 மணியளவில் கூடுகிறார்கள். ஆட்சியமைக்க உரிமை கோருவது தொடர்பாக முக்கிய முடிவுகள் இந்த ஆலோசனையில் எடுக்கப்படலாம் எனத் தெரிகிறது.