இந்தியாவின் பொதுத்துறை காப்பீடு நிறுவனமான எல்.ஐ.சி.யின் அதிகாரபூர்வ இணையத்தளம், முழுவதுமாக ஹிந்தி மொழிக்கு மாற்றப்பட்டுள்ளது.
இந்தியாவின் பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்களில் முதன்மையானது ஃலைப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா என்று அழைக்கப்படும் எல்.ஐ.சி. மத்திய நிதி அமைச்சகத்தின் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் எல்.ஐ.சி.யின் வசம் சுமார் ரூ. 52 லட்சம் கோடி மதிப்பிலான சொத்துகள் உள்ளன.
பல தரப்பட்ட இந்திய மக்களுக்கும் பயன் தரும் வகையில் ஆயுள் காப்பீடு, வீட்டுக் கடன், ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட பல சேவைகளை கடந்த 64 வருடங்களுக்கும் மேலாக வழங்கி வருகிற்து எல்.ஐ.சி.
இந்நிலையில், எல்.ஐ.சி.யின் அதிகாரபூர்வ இணையத்தளம் சமீபத்தில் ஹிந்திக்கு மாற்றப்பட்டுள்ளதை ஒட்டி சர்ச்சை எழுந்துள்ளது. www.licindia.in என்பது எல்.ஐ.சி.யின் அதிகாரபூர்வ இணையதளமாகும். இந்த இணையதள முகவரியை உபயோகித்து உள்நுழைந்தால், இணையத்தளத்தின் முகப்புப் பக்கம் முழுவதும் ஹிந்திக்கு மாறியுள்ளது.
மேலும், இணையத்தளத்தின் முகப்புப் பக்கத்தில் `மொழி’ என ஹிந்தியில் குறிப்பிடப்பட்டுள்ள வார்த்தையை அழுத்தி அதில் ஆங்கிலத்தை தேர்வு செய்தால் மட்டுமே எல்.ஐ.சி. இணையத்தளத்தின் முகப்புப் பக்கம் முழுமையாக ஆங்கிலத்திறகு மாறும் வகையில் மாற்றப்பட்டுள்ளது. இந்த மாற்றம் எப்போது மேற்கொள்ளப்பட்டது என்பது குறித்த தகவல் வெளியாகவில்லை.
அதேநேரம், சில சமயங்களில் ஆங்கிலத்தை தேர்வு செய்தாலும், ஹிந்தி மொழியிலேயே எல்.ஐ.சி. இணையத்தளம் தொடர்வதாக சமூக வலைதளங்களில் பயனர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.