இந்தியா

ஜேஎன்யு பல்கலை. மாணவர் பேரவைத் தேர்தல்: இடதுசாரி மாணவர்கள் வெற்றி

கிழக்கு நியூஸ்

தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் பேரவைத் தேர்தலில் இடதுசாரி கூட்டணி மாணவர்கள் முழுமையாக வெற்றி பெற்றுள்ளார்கள்.

ஜேஎன்யு தேர்தல் குழுத் தலைவர் ஷைலேந்திர குமார் தேர்தல் முடிவுகளை வெளியிட்டார்.

ஜேஎன்யு பல்கலை. மாணவர் பேரவைத் தேர்தல் கடந்த 22-ல் நடைபெற்றது. இதில் மாணவர் பேரவைத் தலைவராக இடதுசாரி சார்பில் போட்டியிட்ட தனஞ்ஜெய் 2,598 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். ஏபிவிபி சார்பில் போட்டியிட்ட உமேஷ் சந்திரா அஜ்மீரா 1,676 வாக்குகளை மட்டுமே பெற்று தோல்வியடைந்தார். இதன்மூலம், 1996-க்கு பிறகு முதன்முறையாக தலித் மாணவர் ஒருவர், மாணவர் பேரவைத் தலைவராகியிருக்கிறார்.

துணைத் தலைவராக அவிஜித் கோஷ் 2,409 வாக்குகளைப் பெற்று ஏபிவிபியின் தீபிகா சர்மாவை வீழ்த்தியுள்ளார். பிர்சா அம்பேத்கர் புலே மாணவர்கள் சங்கம் சார்பில் பிரியன்ஷி ஆர்யா பொதுச்செயலாளர் பொறுப்புக்குப் போட்டியிட்டார். இடதுசாரிகள் ஆதரவுடன் இவர் 2,887 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இடதுசாரி சார்பில் இணைச் செயலாளர் பதவிக்குப் போட்டியிட்ட மோ சஜித் 2,674 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

மாணவர் பேரவைத் தலைவராகத் தேர்வான தனஞ்ஜெய் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் கூறுகையில், "இது மாணவர்களுக்கான வெற்றி" என்றார். துணைத் தலைவராகத் தேர்வான அவிஜித் கோஷ் கூறுகையில், "ஜேஎன்யு மாணவர் பேரவைத் தேர்தல் வரலாற்றுச் சிறப்புமிக்கது. 4 ஆண்டுகளுக்குப் பிறகு தேர்தல் நடைபெற்றுள்ளது. ஜேஎன்யு மாணவர் அமைப்பு எப்போதுமே மாணவர்களின் உரிமைக்காகப் போராடியுள்ளது" என்றார்.

கடந்த 2019-ல் நடைபெற்ற மாணவர் பேரவைத் தேர்தலில் எஸ்எஃப்ஐ வேட்பாளர் அய்ஷி கோஷ் வெற்றி பெற்றார்.