இந்தியா

மன்மோகன் சிங் உடலுக்குத் தலைவர்கள் அஞ்சலி!

மன்மோகன் சிங் மறைவை ஒட்டி அடுத்த 7 நாட்களுக்குத் துக்கம் அனுசரிக்கப்படும் என தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது.

ராம் அப்பண்ணசாமி

மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடலுக்குத் தலைவர்கள் பலரும் அஞ்சலி செலுத்தினார்கள்.

92 வயதான முன்னாள் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் வயது மூப்பினால் ஏற்பட்ட உடல் நலக்குறைவால், தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் நேற்று (டிச.26) இரவு காலமானார்.

மன்மோகன் சிங்கின் மறைவுக்கு குடியரசுத் தலைவர், இந்தியப் பிரதமர், தமிழக முதல்வர் உள்ளிட்ட இந்திய அரசியல் தலைவர்கள் மட்டுமின்றி உலகத் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இதைத் தொடர்ந்து இன்று (டிச.27) காலை, மன்மோகன் சிங்கின் உடல் அவரது தில்லி இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

அவரது உடலுக்குப் பிரதமர் நரேந்திர மோடி, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தலைவர் ஜெ.பி. நட்டா, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் நாடாளுமன்றக் குழுத்தலைவர் சோனியா காந்தி உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.

இந்நிலையில், மன்மோகன் சிங் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தும் வகையில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (டிச.27) காலை தில்லிக்குப் புறப்பட்டுச் சென்றார். மேலும், மன்மோகன் சிங் மறைவை ஒட்டி அடுத்த 7 நாட்களுக்குத் துக்கம் அனுசரிக்கப்படும் என தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது.

பொதுமக்கள் அஞ்சலிக்காக மன்மோகன் சிங்கின் உடல் நாளை (டிச.28) காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் வைக்கப்படவுள்ளது. இதைத் தொடர்ந்து அவரது இறுதி சடங்கு ராஜ்காட்டில் நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது.