இந்தியா

காந்தி ஜெயந்தி: தலைவர்கள் மரியாதை

உண்மை, நல்லிணக்கம், சமத்துவம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட அவரது வாழ்க்கை மற்றும் இலட்சியங்கள் நாட்டு மக்களுக்கு எப்போதும் உத்வேகத்தை அளிக்கும்

ராம் அப்பண்ணசாமி

இன்று (அக்.2) தேசத் தந்தை மகாத்மா காந்தியின் 155-வது பிறந்தநாள் ஒட்டி தலைவர்கள் மரியாதை செய்தனர்.

தேசத் தந்தை மகாத்மா காந்தியின் பிறந்தநாளான அக்டோபர் 2, ஒவ்வொரு வருடமும் காந்தி ஜெயந்தியாக அனுசரிக்கப்படுகிறது.

இதை ஒட்டி, தில்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் இன்று பிரதமர் நரேந்திர மோடி மலர்தூவி மரியாதை செய்தார். இதைத் தொடர்ந்து, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, மத்திய அமைச்சர் மனோகர் லால் கட்டார் ஆகியோரும் மலர்தூவி மரியாதை செய்தனர்.

காந்தி ஜெயந்தி தொடர்பாக தன் எக்ஸ் வலைதளக் கணக்கில் பதிவிட்டுள்ள நரேந்திர பிரதமர் மோடி, `பாபுவின் பிறந்தநாளை ஒட்டி நாட்டின் அனைத்து மக்கள் சார்பாகவும் அவருக்கு எனது வணக்கங்கள். உண்மை, நல்லிணக்கம், சமத்துவம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட அவரது வாழ்க்கை மற்றும் இலட்சியங்கள் நாட்டு மக்களுக்கு எப்போதும் உத்வேகத்தை அளிக்கும்’ என்றார்.

மேலும் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, தில்லி முதல்வர் அதிஷி ஆகியோரும் தில்லி ராஜ்காட் மகாத்மா காந்தி நினைவிடத்தில் மரியாதை செய்தனர்.

சென்னை எழும்பூர் பந்தய சாலையில் அமைந்திருக்கும் அரசு அருங்காட்சியகத்தில் உள்ள மகாத்மா காந்தியின் திருவுருவச் சிலைக்கு, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், தமிழக அமைச்சர்கள், மேயர் பிரியா ராஜன், தலைமைச் செயலாளர் முருகானந்தம் உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செய்தனர்.