உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பிஆர் கவாய் மீது வழக்கறிஞர் ஒருவர் காலணி வீச முயற்சித்தது பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
உச்ச நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை தொடங்குவதற்கு முன்பு, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மீது வழக்கறிஞர் என்று கூறப்படும் ஒருவர் காலணியை வீச முயற்சித்திருக்கிறார். எனினும், இம்முயற்சியைத் தடுத்து நிறுத்திய பாதுகாவலர்கள், சம்பந்தப்பட்ட நபரைப் பிடித்து நீதிமன்ற வளாகத்திலிருந்து வெளியேற்றினார்கள்.
சம்பவ இடத்திலிருந்த வழக்கறிஞர்கள் கூறியதன் அடிப்படையில், சம்பந்தப்பட்ட நபர் வெளியேற்றப்படும்போது, 'சனாதன தர்மத்தை அவமதிப்பதை இந்தியா பொறுத்துக்கொள்ளாது' என்று முழக்கம் எழுப்பியிருக்கிறார். மேலும் சிலர் கூறுகையில், வழக்கறிஞர் உடையிலிருந்ததாகச் சொல்லப்படும் அந்த நபர் பேப்பரை வீச முயற்சித்ததாகவும் கூறினார்கள்.
இச்சம்பவம் குறித்துப் பேசிய தலைமை நீதிபதி பிஆர் கவாய், "யாரும் கவனத்தைச் சிதறவிட வேண்டாம். நாங்கள் கவனத்தைச் சிதறவிடவில்லை. இச்செயல்கள் என்னைப் பாதிக்காது" என்றார். இதன் காரணமாக, நீதிமன்றச் செயல்பாடுகள் சிறிது நேரம் தடைபட்டது.
முன்னதாக ஒரு வழக்கு விசாரணையின்போது, தலைமை நீதிபதி பிஆர் கவாய் தெரிவித்த கருத்து பேசுபொருளானது. இதுவே இச்சம்பவத்துக்குக் காரணமாக இருக்கலாம் எனத் தெரிகிறது.
மத்தியப் பிரதேச மாநிலம் சதர்பூர் மாவட்டத்தில் ஜவாரி கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் சேதமடைந்துள்ள 7 அடி உயர விஷ்ணு சிலையை மாற்றி புதிய சிலையைப் பிரதிஷ்டை செய்ய வேண்டும் என ராகுல் தலால் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பிஆர் கவாய் மற்றும் நீதிபதி வினோத் சந்திரன் தலைமையிலான அமர்வு முன்பு இது விசாரணைக்கு வந்தது. அப்போது, இது விளம்பரம் தேடும் நோக்கில் தொடரப்பட்டுள்ள வழக்கு என்று கூறி, மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
அப்போது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பிஆர் கவாய் கூறுகையில், "இது முழுக்க முழுக்க விளம்பரம் தேடும் நோக்கில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு. ஏதாவது செய்யுமாறு கடவுளையே கேட்டுக்கொள்ளுங்கள். நீங்கள் தீவிர விஷ்ணு பக்தர் என்று கருதினால், பிரார்த்தனை செய்து தியானம் மேற்கொள்ளுங்கள்" என்றார்.
உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி பிஆர் கவாய் தெரிவித்த இந்தக் கருத்து சமூக ஊடகங்களில் விவாதத்தைக் கிளப்பியது. பிறகு, இதுதொடர்பாக மௌனம் கலைத்த தலைமை நீதிபதி பிஆர் கவாய், "என் கருத்துகள் சமூக ஊடகங்களில் குறிப்பிட்ட ஒரு கோணத்தில் சித்தரிக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்கள். நான் எல்லா மதங்களையும் மதிக்கிறேன்" என்றார்.
சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா கூறுகையில், "தலைமை நீதிபதி பிஆர் கவாயை எனக்குக் கடந்த 10 ஆண்டுகளாகத் தெரியும். எல்லா மதத் தலங்களுக்கும் அவர் சென்றுள்ளார்" என்றார்.
CJI Gavai | Supreme Court | BR Gavai |