ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவுடன் ரோகிணி ஆச்சார்யா  
இந்தியா

அரசியல் மற்றும் குடும்பத்தில் இருந்து விலகுகிறேன்: லாலு மகள் அறிவிப்பு | Rohini Acharya |

தோல்விக்கு நானே பழியேற்றுக் கொள்கிறேன்! அதைத்தான் என்னைச் செய்யச் சொன்னார்கள்...

கிழக்கு நியூஸ்

பிஹார் தேர்தல் தோல்விக்குப் பொறுப்பேற்று அரசியலில் இருந்தும் குடும்பத்தில் இருந்தும் விலகுவதாக லாலு பிரசாத் யாதவின் மகள் ரோகிணி ஆச்சார்யா அறிவித்துள்ளார்.

பிஹாரின் முன்னாள் முதலமைச்சரும் ராஷ்டிரிய ஜனதா தளத்தின் தலைவருமான லாலு பிரசாத் யாதவுக்கு 7 மகள்கள், 2 மகன்கள். அதில் இரண்டாவது மகள்தான் ரோகிணி ஆச்சார்யா. தொழில்முறை மருத்துவரான இவர், 2022-ல் லாலுவுக்கு நடந்த சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்காக தனது சிறுநீரகத்தைத் தானமாகக் கொடுத்தவர்.

லாலுவின் மகன்கள் தேஜஸ்வி யாதவ், தேஜ்பிரதாப் யாதவைத் தொடர்ந்து இவரும் அரசியலில் இறங்கினார். ஆர்ஜேடி கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்த ரோகிணி ஆச்சார்யா, தேஜ்பிரதாப் யாதவ் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதில் இருந்து அதிருப்தியில் இருந்ததாகக் கூறப்படுகிறது. அடுத்தடுத்து தனது குடும்பத்தைச் சேர்ந்தவர்களிடம் இருந்து சமூக ஊடகங்களில் இணைப்புகளைத் துண்டித்து வந்துள்ளார்.

இந்நிலையில், பிஹார் சட்டமன்ற தேர்தலில் ஆர்ஜேடி கட்சி படு தோல்வியைச் சந்தித்ததை அடுத்து, தோல்விக்குத் தான் பழியேற்றுக் கொள்வதாகக் கூறிய ரோகிணி ஆச்சார்யா, அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில் கூறியிருப்பதாவது:-

“நான் அரசியல் மற்றும் என் குடும்பத்தில் இருந்து விலகுகிறேன். சஞ்சய் யாதவ் மற்றும் ரமீஸ் என்னை இதைத்தான் செய்யச் சொல்லியிருக்கிறார்கள். மேலும், எல்லாப் பழியையும் நானே ஏற்றுக் கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

இதில் அவர் குறிப்பிட்டுள்ள சஞ்சய் யாதவ் என்பவர், ஆர்ஜேடியின் நாடாளுமன்ற உறுப்பினர். தேஜஸ்வி யாதவின் நம்பிக்கைக்கு உரியவர். ரமீஸ் என்பவர் தேஜஸ்வியின் பழைய நண்பர். உத்தர பிரதேசத்தின் முக்கிய அரசியல் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்று பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

Rohini Acharya, Rashtriya Janata Dal (RJD) patriarch Lalu Prasad Yadav's daughter, announced on Saturday that she is quitting politics and disowning her family.