லடாக்கில் வெடித்த வன்முறையில் 4 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 30 பேர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
லடாக்குக்கு மாநில அந்தஸ்து கோரி கடந்த 15 நாள்களாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த காலநிலை ஆர்வலர் சோனம் வாங்சுக், வன்முறையைத் தொடர்ந்து போராட்டத்தைக் கைவிடுவதாக அறிவித்துள்ளார்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் கடந்த 2019-ல் சட்டப்பிரிவு 370 நீக்கத்துக்குப் பிறகு இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டன. லடாக்குக்கு மாநில அந்தஸ்து கோரியும் 6-வது அட்டவணையின் கீழ் சிறப்பு அந்தஸ்து வழங்கக் கோரியும் போராட்டம் நடைபெற்று வருகிறது. கடந்த செப்டம்பர் 10 முதல் 35 நாள்களுக்கு உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டு வந்த 15 பேரில் இருவருடைய உடல்நிலை பாதிக்கப்பட்டது. இவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்கள். காலநிலை ஆர்வலர் சோனம் வாங்சுக் போராட்டத்தில் பங்கெடுத்து வருகிறார். 14 நாள்களாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் வாங்சுக் உடன் துணை நிற்க வேண்டும் என்பதற்காக எல்ஏபி அமைப்பின் இளைஞர் பிரிவினர் போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.
இதனிடையே, மத்திய உள்துறை அமைச்சகம் மற்றும் லடாக் பிரதிநிதிகள் இடையே அக்டோபர் 6-ல் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.
இந்நிலையில், லடாக்கின் இன்று வன்முறை வெடித்தது. இதைத் தொடர்ந்து, போராட்டத்தைக் கைவிடுவதாக வாங்சுக் அறிவித்துள்ளார். பாஜக அலுவலகம் சூறையாடப்பட்டன. கற்கள் வீசித் தாக்குதல் நடந்துள்ளன. காவல் துறையினருடன் மோதல் சம்பவம் அரங்கேறியுள்ளது. இதில் 4 பேர் உயிரிழந்துள்ளார்கள். 5 பேருக்கு மேல் கூட மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. முன் அனுமதி இல்லாமல் பேரணிகளை மேற்கொள்ளத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
போராட்டத்தைக் கைவிடுவது பற்றி வாங்சுக் கூறியதாவது, "லேவில் போராட்டத்தின்போது வன்முறை வெடித்துள்ளது. பல அலுவலகங்கள் மற்றும் காவல் வாகனங்கள் சூறையாடப்பட்டு எரிக்கப்பட்டுள்ளன. லேவில் பந்த் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இளைஞர்கள் அதிகளவில் திரள்கிறார்கள். இது இளைஞர்களின் கோபம். ஜென்-ஸி தலைமுறையினரின் புரட்சி" என்றார் அவர்.
Ladakh | Leh | LAB | Sonam Wangchuk |