இந்தியா

மணிப்பூரில் ராக்கெட் தாக்குதல்: பொதுமக்களைக் குறிவைத்த குக்கி கிளர்ச்சியாளர்கள்

ராம் அப்பண்ணசாமி

மணிப்பூரின் பிஷ்ணுபூர் மாவட்டத்தில் பொதுமக்கள் வாழும் பகுதிகளைக் குறிவைத்துக் குக்கி கிளர்ச்சியாளர்கள் நடத்திய ராக்கெட் தாக்குதலில் 78-வயது முதியவர் ஒருவர் உயிரிழந்தார். மேலும் இந்தத் தாக்குதலில் 6 நபர்கள் காயமடைந்துள்ளனர் என்று மணிப்பூர் காவல்துறை செய்தி வெளியிட்டுள்ளது

இது தொடர்பாக அதிகாரபூர்வ எக்ஸ் வலைதளக் கணக்கில் மணிப்பூர் காவல்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு பின்வருமாறு:

`செப்.06-ல் குக்கி கிளர்ச்சியாளர்கள் பிஷ்ணுபூர் மாவட்டத்தில் பொதுமக்கள் வசிக்கும் 2 பகுதிகளைக் குறிவைத்து ராக்கெட் தாக்குதல் நடத்தினார்கள். இதில் 78-வது முதியவரான ஆர்.கே. ரபெய் என்பவர் உயிரிழந்தார். மேலும் 6 நபர்கள் இந்தத் தாக்குதலில் காயமடைந்துள்ளனர்.

கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான எதிர்த்தாக்குதலை நடத்த ராக்கெட் தாக்குதல் சம்பவம் நடைபெற்ற பகுதிகளைச் சுற்றியிருக்கும் மலைப்பாங்கான பகுதிகளில் பாதுகாப்புப் பகுதிகளில் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் சம்பவ இடத்துக்குச் சென்ற மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் தலைமையிலான காவல்துறையினர் மீது குக்கி கிளர்ச்சியாளர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினார்கள்.

இதற்கான தகுந்த பதிலடியை காவல்துறை அளித்தது. வான்வழிக் கண்காணிப்பைப் பலப்படுத்த ராணுவ ஹெலிகாப்டர் உபயோகப்படுத்தப்பட்டுள்ளது. சட்ட ஒழுங்கு நிலவரம் குறித்து ஆலோசிக்க உயர்மட்டக் கூட்டம் நடைபெற்றது’.

கடந்த செப்.05-ல் மணிப்பூரின் காங்போக்பி, இம்பால் கிழக்கு மாவட்டங்களின் பதற்றமான பகுதிகளில் இந்திய இராணுவமும், மணிப்பூர் காவல்துறையும் நடத்திய கூட்டுச் சோதனை நடவடிக்கையில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த பலவிதமான ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன.