கொல்கத்தாவில் நேற்றிரவு முதல் மிகக் கனமழை பெய்த நிலையில், மின்கசிவால் 8 பேர் உயிரிழந்துள்ளார்கள்.
கொல்கத்தாவில் நேற்றிரவு முதல் மிகக் கனமழை பெய்தது. வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வு காரணமாக இந்தக் கனமழை பெய்துள்ளது. கரியா கம்டாஹாரியில் 332 மி.மீ., ஜோத்பூர் பூங்கா 285 மி.மீ., டாப்சியாவில் 275 மி.மீ. அளவுக்கு மழை பதிவாகியுள்ளது.
இதனால், அங்கு பல்வேறு இடங்களில் வெள்ள நீர் சூழ்ந்தன. பல இடங்களில் முழங்கால் முதல் இடுப்பளவுக்கு வெள்ள நீர் இருந்ததாகத் தகவல்கள் வருகின்றன. தனியார் பேருந்துகள் குறைந்த அளவில் இயக்கப்படுகின்றன, சாலைகளில் மரங்கள் விழுந்துள்ளன, ஏஜேசி போஸ் மற்றும் டிஹெச் சாலை உள்ளிட்டவை மூடப்பட்டுள்ளன. ஹௌரா உள்பட பல்வேறு இடங்களில் ரயில் சேவைகளும் முடங்கியுள்ளன. பெனியாபுகர் மற்றும் கிதெர்போர் உள்ளிட்ட இடங்களில் மின் கசிவு ஏற்பட்டுள்ளதாகச் செய்திகள் வெளியாகின்றன. தாழ்வான பகுதிகளில் சூழ்ந்த வெள்ள நீர் காலை முதல் அகற்றப்பட்டு வருகின்றன.
மாணவர்களின் பாதுகாப்பைக் கருதி பல்வேறு பள்ளிகளில் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டது.
ஜாதவ்பூர் பல்கலைக்கழகம், கொல்கத்தா பல்கலைக்கழகங்களில் தேர்வுகள் உள்பட அனைத்துக் கல்விச் செயல்பாடுகளும் ஒத்திவைக்கப்பட்டன. மின்கசிவால் மொத்தம் 7 முதல் 8 பேர் வரை உயிரிழந்ததாகக் கூறப்படுகின்றன.
மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி கூறுகையில், இதுபோன்ற மழைப் பொழிவைப் பார்த்தது இல்லை என்றார். மேலும், உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு இரங்கலையும் தெரிவித்தார்.
"இதுபோன்ற ஒரு மழையை நான் பார்த்ததே இல்லை. மேகவெடிப்பு காரணமாக உயிரிழந்தவர்களுக்காக வருந்துகிறேன். பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்குமாறு உத்தரவிட்டேன். வேலைக்குச் செல்பவர்களுக்கு அலுவலகம் செல்லத் தேவையில்லை. நாளையும் வேலைக்குச் செல்லத் தேவையில்லை.
7 முதல் 8 பேர் மின்கசிவால் உயிரிழந்ததாகக் கேள்விப்பட்டேன். இது துரதிர்ஷ்டவசமானது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு கொல்கத்தா மின் பகிர்மானக் கழகத்தில் வேலை வழங்கப்பட வேண்டும். முடிந்த உதவிகள் அனைத்தையும் செய்துகொடுப்போம். கொல்கத்தா மின் பகிர்மானக் கழகம் கூடுதல் கவனத்துடன் இருப்பது அவர்களுடைய கடமை இல்லையா? மின் விநியோகத்தை அவர்கள் தான் செய்கிறார்கள், நாங்கள் அல்ல. மக்கள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டியது அவர்களுடைய கடமை. அவர்கள் இங்கு தொழில் செய்வார்கள். ஆனால், நவீனப்படுத்தப்பட மாட்டார்களா? இதைச் செய்ய அவர்களுடைய ஆட்களை களத்துக்கு அனுப்ப வேண்டும்" என்றார் மமதா பானர்ஜி.
கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக 30 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. 31 விமானங்கள் தாமதமாகப் புறப்படவுள்ளன/வந்து சேரவுள்ளன.