மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் உள்ள, தெற்கு கல்கத்தா சட்டக் கல்லூரியின் 24 வயது மாணவி ஒருவர், கல்லூரி வளாகத்தில் வைத்து மூன்று நபர்களால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார்.
கூட்டுப் பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் தொடர்புடைய மூன்று குற்றவாளிகளும் இன்று (ஜூன் 27) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, ஐந்து நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் இருவர் தற்போதைய மாணவர்கள் என்றும், முக்கிய குற்றவாளியான மூன்றாவது நபர் திரிணாமுல் காங்கிரஸின் மாணவர் பிரிவின் தீவிர உறுப்பினர் என்றும் கூறப்படுகிறது.
6 மாதங்களுக்கு முன்பு கொல்கத்தாவின் ஆர்.ஜி. கர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் வைத்து பயிற்சி பெண் மருத்துவர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொல்லப்பட்ட விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், இரு நாள்களுக்கு முன்பு சட்ட கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
பாதிக்கப்பட்ட மாணவி அளித்த புகாரின்படி, கடந்த ஜூன் 25 (புதன்கிழமை) அன்று நண்பகல் 12 மணியளவில் தெற்கு கல்கத்தா சட்டக் கல்லூரிக்கு அவர் தேர்வு தொடர்பான படிவங்களை நிரப்ப வந்துள்ளார்.
வளாகத்தில் உள்ள பாதுகாவலர் அறையில் வைத்து குற்றவாளிகளால் அவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார்.
அந்தப் பெண் அளித்த புகாரின் அடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணையில் ஸெயிப் அஹ்மத், பிரமித் முகர்ஜி ஆகிய இரண்டு மாணவர்களும், மோனோஜித் மிஸ்ரா என்கிற ஊழியரும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். அந்த ஊழியர் சட்டக் கல்லூரியின் முன்னாள் மாணவர் மற்றும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸின் தற்போதைய மாணவர் பிரிவுத் தலைவர் என்று கூறப்படுகிறது.
தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு முக்கிய குற்றவாளியான மிஸ்ரா கூறியதாகவும், அதை நிராகரித்ததால் தன் மீது கோபமடைந்த மிஸ்ரா இத்தகைய செயலில் ஈடுபட்டதாகவும் மாணவி வாக்குமூலம் அளித்துள்ளதாக இந்தியா டுடே வெளியிட்ட செய்தியில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.