ரேவண்ணா (கோப்புப்படம்) ANI
இந்தியா

ஓடி ஒளியப்போவதில்லை: வழக்குப்பதிவு குறித்து ஹெச்டி ரேவண்ணா

கிழக்கு நியூஸ்

கர்நாடகத்தில் ஆபாசக் காணொலி விவகாரம் பூதாகரமானதைத் தொடர்ந்து, இது எந்த மாதிரியான சதித் திட்டம் என்பது தனக்குத் தெரியும் என மதச்சார்பற்ற ஜனதா தளத் தலைவர் ஹெச்டி ரேவண்ணா தெரிவித்துள்ளார்.

மதச்சார்பற்ற ஜனதா தளத் தலைவர் தேவெகௌடாவின் பேரன் பிரஜ்வல் ரேவண்ணா எம்.பி. வீட்டில் முன்பு பணிபுரிந்த பெண் பணியாளர் அளித்த புகாரின் பெயரில் பிரஜ்வல் ரேவண்ணா மீது கர்நாடக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளார்கள். இந்த வழக்கில் தேவெகௌடாவின் மகன் ஹெச்டி ரேவண்ணா மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஏற்கெனவே, பிரஜ்வல் ரேவண்ணா தொடர்புடைய ஏராளமான ஆபாசக் காணொலிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இந்தக் காணொலி விவகாரம் குறித்து விசாரிக்க கர்நாடக காங்கிரஸ் அரசு சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்துள்ளது.

இந்த நிலையில், பெங்களூருவில் செய்தியாளர்களைச் சந்தித்த ஹெச்டி ரேவண்ணா கூறியதாவது:

"இது எந்த மாதிரியான சதித் திட்டம் என்பது எனக்குத் தெரியும். நான் பயந்து ஓடி ஒளியும் ஆள் கிடையாது. 4, 5 ஆண்டுகளுக்கு முந்தைய பழைய விடியோக்களை வெளியிட்டுள்ளார்கள். பிரஜ்வல் ரேவண்ணாவைக் கட்சியிலிருந்து நீக்குவது கட்சித் தலைமைதான் முடிவெடுக்கும்.

அவர்களுடைய மாநில அரசு. அவர்கள் விசாரிக்கட்டும். பிரஜ்வல் ஏற்கெனவே வெளிநாட்டுக்குச் செல்லவிருந்தது. அவருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்படவுள்ளது என்பதெல்லாம் அவருக்கு முன்பே தெரியாது. கடந்த 40 ஆண்டுகளில் காங்கிரஸ் ஆட்சியின் கீழ் நிறைய விசாரணைகளை எதிர்கொண்டுள்ளோம். இந்த விவகாரம் தொடர்பாக தேவெகௌடாவிடம் இதுவரை பேசவில்லை" என்றார்.

கர்நாடக மக்களவைத் தேர்தலில் மதச்சார்பற்ற ஜனதா தளம், பாஜகவுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிடுகிறது. பிரஜல் ரேவண்ணா தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளராக ஹாசன் தொகுதியில் போட்டியிடுகிறார்.