இந்தியா

அமேதி, ரேபரலி வேட்பாளர்கள் யார்?: ஜெய்ராம் ரமேஷ் பிரத்யேக தகவல்

கிழக்கு நியூஸ்

உத்தரப் பிரதேச மாநிலம் அமேதி மற்றும் ரேபரலி தொகுதிகளுக்கான வேட்பாளர்களை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இறுதி செய்யவுள்ளதாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

உத்தரப் பிரதேச மாநிலம் அமேதியில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி 15 ஆண்டுகள் எம்.பி.யாக இருந்துள்ளார். 2019 மக்களவைத் தேர்தலில் ஸ்மிருதி ராணியிடம் தோல்வியைச் சந்தித்தார். ரேபரலியும் காங்கிரஸ் கட்சியின் பாரம்பரிய தொகுதி. இந்தத் தொகுதியில் சோனியா காந்தி போட்டியிட்டு வந்த நிலையில், அவர் மாநிலங்களவைக்குத் தேர்வானார்.

இதனால், இந்த இரு தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் யார் என்ற கேள்விகள் இருந்து வந்த நிலையில், ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி போட்டியிடவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகின.

கடந்த ஏப்ரல் 27-ல் மீதமுள்ள தொகுதிகளுக்கான வேட்பாளர்களை இறுதி செய்ய காங்கிரஸின் மத்திய தேர்தல் குழுக் கூட்டம் கூடியது. அமேதி மற்றும் ரேபரலியில் காங்கிரஸ் குடும்பத்தினரே போட்டியிட வேண்டும் என உத்தரப் பிரதேச காங்கிரஸ் பிரிவிடம் இருந்து மத்திய தேர்தல் குழுவுக்குப் பரிந்துரை வந்துள்ளதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்த நிலையில், தில்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்தில் ஜெய்ராம் ரமேஷ் செய்தியாளர்களைச் சந்தித்தார். "அமேதி மற்றும் ரேபரலி தொகுதிகளுக்கான வேட்பாளர்களை இறுதி செய்வதற்கான அதிகாரத்தை மத்திய தேர்தல் குழு மல்லிகார்ஜுன கார்கேவிடம் வழங்கியுள்ளது. எனவே, இதுகுறித்து அவர் தான் முடிவெடுக்கவுள்ளார். அடுத்த 24 முதல் 30 மணி நேரத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்" என்றார் ஜெய்ராம் ரமேஷ்.