இந்தியா

மக்களின் தீர்ப்பை மாற்றத் துடிக்கிறார் மோடி: கார்கே கடும் தாக்கு!

ராம் அப்பண்ணசாமி

மக்களவைத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகான இண்டியா கூட்டணித் தலைவர்களின் ஆலோசனைக் கூட்டம் இன்று தில்லியில் காங்கிரஸ் கட்சித் தலைவர் கார்கேவின் இல்லத்தில் நடைபெற்றது.

இதில் தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார், திமுக தலைவர் ஸ்டாலின், சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ், தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் ஓமர் அப்துல்லா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த சீதாராம் யெச்சூரி, விசிக தலைவர் தொல்.திருமாவளவன், ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த சஞ்சய் சிங், ராஷ்ட்ரிய ஜனதா கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ், காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி போன்றோர் பங்கேற்றனர்.

இந்தக் கூட்டத்தில், `இண்டியா கூட்டணியின் தோழமைக் கட்சித்தலைவர்களை நான் வரவேற்கிறேன். இந்தத் தேர்தலை நாம் அனைவரும் ஒற்றுமையுடன் சந்தித்தோம்’ எனத் தன் உரையைத் தொடங்கினார் கார்கே.

’மக்கள் கொடுத்த தீர்ப்பு மோடிக்கு எதிராகவும், அவரது அரசியல் பாணிக்கு எதிராகவும் உள்ளது. இது நிச்சயமாக மோடிக்குப் பெரும் இழப்பு. சொல்லப்போனால் தார்மீக அடிப்படையில் இது அவருக்குப் பெரும் தோல்வி. ஆனால் மக்களின் தீர்ப்பை மாற்றத் துடிக்கிறார் மோடி’ எனக் கடுமையாகத் தன் உரையில் பிரதமர் மோடியைத் தாக்கிப் பேசினார் கார்கே.