இந்தியா

ராஜஸ்தான், பஞ்சாபில் என்ஐஏ சோதனை

கிழக்கு நியூஸ்

காலிஸ்தான் மற்றும் திட்டமிட்ட குற்றவாளிகளின் தொடர் கூட்டமைப்புக்கு எதிராக நடந்து வரும் விசாரணையில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) பஞ்சாப் மற்றும் ராஜஸ்தானில் 16 இடங்களில் இன்று சோதனை நடத்தியது.

பஞ்சாபில் 14 இடங்கள், ராஜஸ்தானில் 2 என மொத்தம் 16 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. பயங்கரவாதிகள், ரெளடிகள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு இடையிலான தொடர்பை அழிக்கும் முயற்சிகளில் ஒன்றாக என்ஐஏவின் விசாரணைகள் நடந்து வருகின்றன. நிதி ஆதாரங்கள் உள்பட அக்கூட்டணியின் உட்கட்டமைப்பை அகற்றுவதே என்ஐஏவின் குறிக்கோள்.

மாநிலக் காவல் படைகளின் ஒருங்கிணைப்பில் செவ்வாய்க்கிழமை இன்று காலை முதல் இந்தத் தேடுதல் நடவடிக்கையை என்ஐஏ மேற்கொண்டது. சில குறிப்பிட்ட தகவல்களின் அடிப்படையில் சோதனைகள் நடத்தப்படுகின்றன.

காலிஸ்தான் ஆதரவாளர்களைத் தொடர்புகொண்டதாகச் சந்தேகிக்கக்கூடிய நபர்களின் குடியிருப்புகள், பிற வளாகங்கள் மற்றும் குற்றவியல் தொடர்புகளில் ஈடுபட்டவர்களின் இடங்கள் என்று சோதனை நடைபெறுகின்றன. பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்ட ஆறு பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

விசாரணைக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆறு நபர்களும் தப்பியோடிய காலிஸ்தான் பயங்கரவாதிகளுடன் சமூக ஊடகங்கள் மற்றும் பிற தகவல் தொடர்பு வழிகள் மூலம் நெருங்கியத் தொடர்பில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.