இந்தியா

தூய்மைப் பணியாளரின் மரணத்தைத் தொடர்ந்து கேரள அரசு நடவடிக்கை

ஜோயின் மரணத்தை அடுத்து மாநகராட்சி நிர்வாகம் மற்றும் மாநில அரசு ஆகியவற்றின் மீது பலரும் தங்களது கண்டனத்தைத் தெரிவித்தனர்

ராம் அப்பண்ணசாமி

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நிலவும் குப்பை மேலாண்மை பிரச்சனை குறித்த ஆய்வுக்கூட்டத்தை நேற்று (ஜூலை 18) கேரள முதல்வர் பினராயி விஜயன் நடத்தினார். இந்தக் கூட்டத்தில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.

சமீபத்தில் திருவனந்தபுரத்தில் அமைந்துள்ள ஆமையிழஞ்சான் கழிவு நீர் கால்வாயை சுத்தப்படுத்த அதில் இறங்கினார் தூய்மைப்பணியாளர் ஜோய். அப்போது கால்வாயில் கழிவு நீர் திடீரென பெருக்கெடுத்து ஓடியதால் கழிவு நீரில் அடித்துச் செல்லப்பட்டார் ஜோய். ஆனால் ஆமையிழஞ்சான் கால்வாயில் கழிவு நீருடன் டன் கணக்கிலான பிளாஸ்டிக் உள்ளிட்ட திடக்கழிவுகள் தேங்கி இருந்ததால் ஜோயைக் கண்டுபிடிப்பதில் தாமதம் ஏற்பட்டது.

இதைத் தொடர்ந்து இரண்டு நாட்கள் கழித்து ஜோயின் உடல் ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ள வஞ்சியூர் ஓடையில் கண்டுபிடிக்கப்பட்டது. ஜோயின் மரணத்தை அடுத்து மாநகராட்சி நிர்வாகம் மற்றும் மாநில அரசு ஆகியவற்றின் மீது பலரும் தங்களது கண்டனத்தைத் தெரிவித்தனர். மேலும் காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அரசைக் கண்டித்துப் போராட்டங்கள் நடத்தின.

இதை அடுத்து உயிரிழந்த ஜோய் குடும்பத்துக்கு ரூ. 10 லட்சம் நிதியுதவி அறிவித்த முதல்வர் பினராயி விஜயன், தலைநகரில் நிலவும் குப்பை மேலாண்மை பிரச்சனை குறித்து முக்கிய முடிவுகளை எடுக்க ஆய்வுக்கூட்டத்தை நடத்தினார்.

இந்தக் கூட்டத்தில் தடை செய்யப்பட்ட நெகிழிப் பைகள் மற்றும் பொருட்களை வைத்திருப்பவர்கள் மீதும், அவற்றைப் பொது இடங்களில் வீசுபவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் பொது இடங்களிலும், நீர் நிலைகளிலும் குப்பைகளைக் கொட்டும் வாகனங்களின் உரிமங்களை ரத்து செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

குப்பை கொட்டுவதை கண்காணிக்க 40 செயற்கை நுண்ணறிவு காமிராக்கள் நிறுவவும், குப்பை மேலாண்மை நடவடிக்கைகளில் ஈடுபடும் பணியாளர்களும், நபர்களும் கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்து மாநில தீயணைப்பு மற்றும் மீட்புப்பணி துறையினர் அவர்களுக்குத் தகுந்த பயிற்சிகளை அளிக்கவும், இந்தக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.