‘தி கேரளா ஸ்டோரி 2’ படத்திற்கு இடைக்காலத் தடை: கேரள உயர் நீதிமன்றம் 
இந்தியா

‘தி கேரளா ஸ்டோரி 2’ படத்திற்கு இடைக்காலத் தடை: கேரள உயர் நீதிமன்றம் | The Kerala Story 2 |

படத்தின் முதற்கட்ட காட்சிகள் மத நல்லிணக்கத்திற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் உள்ளது....

கிழக்கு நியூஸ்

தி கேரளா ஸ்டோர் 2: கோஸ் பியாண்ட் படம் வெளியாக இடைக்காலத் தடை விதித்து கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2023-ல் சுதிப்டோ சென் இயக்​கத்​தில் வெளியான தி கேரளா ஸ்டோரி படம், கேரளாவில் பெண்கள் மதமாற்றம் செய்யப்பட்டு, பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருந்ததால் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அப்படம் பல மாநிலங்களில் தடை செய்யப்பட்டது. இருப்பினும் வசூல் ரீதியாக வெற்றிபெற்றது.

சர்ச்சைக்குரிய அடுத்த பாகம்

இதையடுத்து இப்படத்தின் அடுத்த பாகம், ‘தி கேரளா ஸ்டோரி 2: கோஸ் பியாண்ட்” என்ற பெயரில் உருவாகியுள்ளது. இப்படம் பிப்ரவரி 27 வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை கமக்யா நாராயண் சிங் இயக்கியுள்ளார். இப்படத்தின் டிரெய்லர் கடந்த பிப்ரவரி 14 அன்று வெளியானது. இதிலும் சர்ச்சைக்குரிய காட்சிகள் இடம்பெற்றிருந்தது. இது பல்வேறு விமர்சனங்களைச் சந்தித்தது.

மத ஒற்றுமையைச் சீர்குலைக்கிறது

இதற்கிடையில், கண்ணனூரைச் சேர்ந்த ஸ்ரீதேவ் நம்பூதிரி என்பவர், ”இப்படத்தில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த இளம் பெண்கள் கட்டாய மத மாற்றம் செய்யப்பட்டு பயங்கரவாத நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்படுவதை வெளிப்படுத்தும் இந்தப் படத்திற்கு வேண்டுமென்றே 'கேரளா ஸ்டோரி 2' என்று பெயரிடப்பட்டுள்ளது. இது மத ஒற்றுமையைச் சீர்குலைக்கிறது. தணிக்கை வாரியம் இப்படத்தை பொது ஒழுங்கு சார்ந்து மதிப்பிட தவறிவிட்டது” என்று குற்றம்சாட்டி மனுத்தாக்கல் செய்திருந்தார்.

படத்திற்கு தடை விதிக்க வேண்டும்

பிரெடி பிரான்ஸிஸ் என்பவர், “படத்தில் மற்ற மாநிலங்களைச் சேர்ந்த கதாபாத்திரங்கள் கட்டாய மதமாற்றத்திற்கு உள்ளாக்கப்படுவதாகக் கூறிவிட்டு, கேரளா என்ற பெயரை பயன்படுத்தியிருக்கிறார்கள். இது உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளதாகக் கூறுவது சந்தேகமாக இருக்கிறது. இது வெறுப்பைச் சந்தைப்படுத்துவது போல் இருப்பதால், படத்தில் கேரளா என்ற சொல்லைப் பயன்படுத்தவும், படத்தை வெளியிடவும் தடை விதிக்க வேண்டும்” என்று மனுத்தாக்கல் செய்திருந்தார்.

நீதிபதிகளுக்கு திரையிட உத்தரவு

அதேபோல் வழக்கறிஞர் அதுல் ராய் என்பவரும் படத்தின் தணிக்கைச் சான்றிதழ் மற்றும் பெயர் குறித்து கேள்விகளை எழுப்பி மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனுக்களை கடந்த பிப்ரவரி 24 அன்று விசாரித்த நீதிபதி பெச்சு குரியன் தாமஸ், “நீதிபதிகள் முன்னிலையில் படம் திரையிடப்பட வேண்டும். படத்தைப் பார்த்துவிட்டு தணிக்கைச் சான்றிதழ் குறித்த இறுதி முடிவுகளை எடுப்போம்” என்று குறிப்பிட்டிருந்தார்.

தயாரிப்பாளரின் பிரமாணப் பத்திரம்

இதற்கிடையில் படத்தின் தயாரிப்பாளர் சார்பில் நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. அதில், “படத்தை மறுபரிசீலனை செய்யும் அதிகாரம் தணிக்கை வாரியத்திற்கு மட்டுமே உள்ளது. தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி நீதிமன்றம் இதில் தலையிடுவது முறையல்ல. படத்தின் பெயரை மாற்ற முடியாது. கேரளா உட்பட மூன்று மாநிலங்களில் நடக்கும் நிகழ்வுகள் படத்தில் சித்தரிக்கப்பட்டுள்ளன. டீஸரில் மூன்று மாநிலங்களைச் சேர்ந்த மூன்று பெண்கள் இடம்பெற்றுள்ளனர். இந்த டீஸர் வெவ்வேறு மாநிலங்களில் உள்ள பிரச்னைகளைக் காட்டுகிறது. தலைப்பில் உள்ள 'கோஸ் பியாண்ட்' என்ற வார்த்தை அலங்காரத்திற்காகப் பயன்படுத்தப்படவில்லை" என்று கூறப்பட்டது.

வதந்தியும் விளக்கமும்

இதற்கிடையில் கேரள உயர் நீதிமன்றத்தின் உத்தரவின்படி இணையதளத்தில் இருந்து படத்தின் டீசர் நீக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின. இதனை மறுத்து படத்தின் தயாரிப்பு நிறுவனம் பதிவு ஒன்றை வெளியிட்டது. அதில் கூறியிருப்பதாவது:-

“தி கேரளா ஸ்டோரி 2 - கோஸ் பியாண்ட் டீசர் நீக்கப்பட்டது தொடர்பாக தற்போது பரவி வரும் செய்திகள் முற்றிலும் தவறானவை, ஆதாரமற்றவை என்பதை சன்ஷைன் பிக்சர்ஸ் திட்டவட்டமாக தெளிவுபடுத்த விரும்புகிறது. இந்த விஷயம் தற்போது நீதிமன்றத்தில் உள்ளது. எந்தவொரு உள்ளடக்கத்தையும் நீக்குமாறு எந்த நீதிமன்றமும் எந்த தீர்ப்பையோ உத்தரவையோ பிறப்பிக்கவில்லை. நாங்கள் எந்த உள்ளடக்கத்தையும் நீக்கவும் இல்லை. தி கேரளா ஸ்டோரி 2 - கோஸ் பியாண்ட் படத்தின் டீசர் மற்றும் டிரெய்லர் இரண்டும் எங்கள் அனைத்து அதிகாரப்பூர்வ தளங்களிலும் தொடர்ந்து கிடைக்கும். ஊடக நிறுவனங்கள், டிஜிட்டல் தளங்கள் மற்றும் தனிநபர்கள் சரிபார்க்கப்படாத தகவல்களையும் ஊக அறிக்கைகளையும் பரப்புவதைத் தவிர்க்குமாறு நாங்கள் வலியுறுத்துகிறோம்” என்று குறிப்பிடப்படிருந்தது.

படம் வெளியாக இடைக்காலத் தடை

இதைத் தொடர்ந்து இன்று இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஸ்ரீதேவ் நம்பூதிரி மற்றும் பிரான்ஸிஸ் ஆகியோரின் மனுக்களை விசாரித்த நீதிபதி, வழக்கின் விசாரணை முழுவதுமாக முடியும் வரை படத்தை வெளியிட இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டனர். மேலும், வழக்கறிஞர் அதுல் ராயின் மனுவைத் தள்ளுபடி செய்தனர். அப்போது பேசிய நீதிபதி, “படத்தின் முதற்கட்ட காட்சிகள் மத நல்லிணக்கத்திற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் உள்ளது. இதனால் தணிக்கை வாரியம் படத்தை மறு ஆய்வு செய்யும் முடிவை 2 வாரத்திற்குள் எடுத்து நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும். அதுவரை படத்தை வெளியிட இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது” என்றார். இதனால் படம் திட்டமிட்டபடி வெள்ளிக்கிழமை (பிப்.27) அன்று வெளியாகாது என்பது தெரியவந்துள்ளது.

Kerala High Court stays release of Kerala Story 2, asks CBFC to examine challenge to film. The order was passed on petitions challenging the CBFC certification granted to the movie on the grounds that it misrepresents Kerala and might incite communal disharmony.