கேரள கடற்கரையில் மூழ்கிய லைபீரியா கப்பல் ANI
இந்தியா

தொடர் கப்பல் விபத்துகள்: மத்திய, மாநில அரசுகளுக்கு உயர் நீதிமன்றம் கண்டனம்

இந்த விவகாரத்தில் இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விவரங்களை சமர்ப்பிக்குமாறு இரு அரசுகளையும் நீதிமன்றம் கேட்டுக்கொண்டது.

ராம் அப்பண்ணசாமி

கேரள கடற்கரையில் அடுத்தடுத்து இரண்டு கப்பல் விபத்துக்கள் ஏற்பட்ட விவகாரத்தில், மத்திய-மாநில அரசுகளுக்கு கேரள உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் மீண்டும் நிகழாமல் தடுக்க துரிதமாக, உறுதியான நடவடிக்கைகளை எடுக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த மே 25 அன்று கேரள கடற்கரையில், அபாயகரமான ரசாயனங்களைக்கொண்ட கொள்கலன்களுடன் கூடிய லைபீரியாவைச் சேர்ந்த எம்.எஸ்.சி எல்சா 3 என்ற கப்பல் மூழ்கியது. இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க உத்தரவிடக் கோரி முன்னாள் எம்.பி. டி.என். பிரதாபன் தாக்கல் செய்த பொது நல வழக்கை கேரள உயர் நீதிமன்றம் இன்று (ஜூன் 13) விசாரித்தது.

மேலும், கடந்த ஜூன் 9 அன்று நடைபெற்ற மற்றொரு சம்பவத்தில், கேரளத்தின் பெய்பூர் கடற்கரையில் சிங்கப்பூர் கொடியுடன் கூடிய வான் ஹை 503 என்ற சரக்கு கப்பல் தீப்பிடித்து எரியத் தொடங்கியது. இன்று (ஜூன் 13) காலை வரை அந்த கப்பல் தொடர்ச்சியாக எரிந்துகொண்டிருந்தது.

இத்தகைய விவகாரங்களில் தொடர்ச்சியாக நடவடிக்கை எடுக்காமல் இருப்பது இதுபோன்ற விபத்துகளை இயல்பாக்கும் என்று குறிப்பிட்ட உயர் நீதிமன்றம், மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுப்பதற்கு முன்பு தற்போதுள்ள சட்டங்களையும், சர்வதேச ஒப்பந்தங்களையும் ஆராய வேண்டும் என்று கருத்து தெரிவித்தது.

மேலும், இந்த விபத்தால் ஏற்பட்ட இழப்புகளை சம்மந்தப்பட்ட கப்பல் நிறுவனத்திடமிருந்து வசூலிக்கவேண்டும் என்றும், அரசு நிதியைப் பயன்படுத்தி இழப்பீடு வழங்கக்கூடாது என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது. அத்துடன், இத்தகைய விபத்துகளால் ஏற்படும் சுற்றுச்சூழல் சேதத்தை விசாரிக்க வேண்டியதன் அவசியத்தையும் உயர் நீதிமன்றம் வலியுறுத்தியது.

இறுதியாக, இந்த விவகாரத்தில் இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விவரங்களை சமர்ப்பிக்குமாறு மத்திய மாநில அரசுகளை கேட்டுக்கொண்டதுடன், இந்த விஷயத்தில் தங்களுக்கு உதவ ஒரு நிபுணரை நியமிப்பதாகவும் உயர் நீதிமன்றம் கூறியது.

மேலும், இது தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை விசாரணை நடத்துவதற்கான வாய்ப்பு குறித்து உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.