கேரள மாநிலம் புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் கருவறைக்கு முன்பு இருபுறமும் துவாரபாலகர் சிலைகள் உள்ளன. செப்பனிடும் பணிக்காக துவாரபாலகர்களின் கவசங்கள் அண்மையில் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
சபரிமலையின் சிறப்பு ஆணையர் அல்லது உயர் நீதிமன்றத்தின் அனுமதி இல்லாமல் தேவஸ்வம் அதிகாரிகளால் கவசம் எடுத்து ஒப்படைக்கப்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
இதனிடையே, மற்றொரு குற்றச்சாட்டும் எழுந்தது. கடந்த 2019-ல் இதேபோல துவாரபாலகர்களின் கவசங்களுக்குச் செப்பனிடும் பணி மேற்கொள்ளப்பட்டது. கவசங்கள் திருப்பி கொண்டு வரப்பட்டபோது, 4.5 கிலோ எடை குறைந்திருந்ததாகக் குற்றச்சாட்டு உள்ளது.
2019 மற்றும் தற்போது என இரண்டு முறையும் கவசங்கலைச் செப்பனிடும் பணிக்கான செலவை ஏற்றுக்கொண்டது பெங்களூருவைச் சேர்ந்த தொழிலதிபர் உன்னிகிருஷ்ணன் போற்றி என்பவர்.
கேரள உயர் நீதிமன்றம் இதைத் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. விசாரணையின் முடிவில் இந்த விவகாரம் குறித்து விசாரிக்க சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்து கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. விவகாரம் குறித்த அனைத்து கோணங்களிலும் விசாரணை நடத்த விசாரணைக் குழுவின் தலைவராக கேரள காவல் துறையில் சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியாக இருக்கும் ஹெச். வெங்கடேஷ் நியமிக்கப்பட்டார். சசிதரன் ஐபிஎஸ் விசாரணையை மேற்கொள்ளவுள்ளார் எனத் தெரிகிறது. விசாரணை முடிந்து ஒரு மாதத்துக்குள் அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ள கேரள உயர் நீதிமன்றம், விசாரணை முடிவடையும் வரை செய்தியாளர்களிடம் எதுவும் பேசக் கூடாது என உத்தரவிட்டுள்ளது.
கேரளத்தில் தற்போது சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. தொடர்ந்து, இரண்டாவது நாளாக கேரள சட்டப்பேரவையில் இந்தப் பிரச்னை வெடித்துள்ளது. தேவஸ்வம் அமைச்சர் வி.என். வாசவன் ராஜினாமா செய்ய வேண்டும் என எதிர்க்கட்சி எம்எல்ஏ-க்கள் கோரிக்கை வைத்து வருகிறார்கள்.
Sabarimala | Kerala Assembly | Kerala High Court |