ANI
இந்தியா

கெஜ்ரிவாலின் நீதிமன்றக் காவல் நீட்டிப்பு!

மதுபான ஊழல் வழக்கில் தில்லி முன்னாள் முதல்வர் மணீஷ் சிசோடியா உள்ளிட்ட 38 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது

ராம் அப்பண்ணசாமி

ஜூன் 3 வரை கெஜ்ரிவாலின் நீதிமன்றக் காவலை நீட்டித்து தில்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தில்லி மதுபான வழக்கில் சம்மந்தப்பட்டுள்ள மற்றொரு நபரான வினோத் சௌஹானுக்கும் நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

நீதிமன்றக் காவல் நீட்டிப்பிற்கான காரணத்தை, ரோஸ் அவென்யூ நீதிமன்ற நீதிபதி கேட்டபோது, `பி.ஆர்.எஸ் கட்சித் தலைவர் கவிதாவின் உதவியாளரிடம் இருந்து கோவா தேர்தலுக்கு முன்பு ரூ. 25 கோடியை வினோத் சௌஹான் பெற்றார். மேலும் இந்த வழக்கில் வினோத் சௌஹானின் நடவடிக்கைகள் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது’ என அரசுத் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.

`இந்த வழக்கு சம்மந்தப்பட்ட லஞ்சப் பணமான 100 கோடியில், இதுவரை மொத்தம் 45 கோடியின் மூலதனம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதில் 25 கோடியை வினோத் சௌஹான் மட்டுமே கையாண்டுள்ளார்’ எனவும் நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர் தெரிவித்தார்.

கடந்த மார்ச் 21-ல் தில்லி மதுபான ஊழல் வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட கெஜ்ரிவால் தில்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டார். மக்களவைத் தேர்தல் பிரச்சாரம் நடந்தபோது உச்ச நீதிமன்றத்தால் கெஜ்ரிவாலுக்கு 21 நாட்கள் ஜாமீன் வழங்கப்பட்டது. 20 நாட்கள் கழித்து ஜாமீனை நீட்டிக்கக் கோரி கெஜ்ரிவால் அளித்த மனுவை நிராகரித்தது ரோஸ் அவென்யூ நீதிமன்றம்.

இந்த மதுபான ஊழல் வழக்கில் தில்லி முன்னாள் முதல்வர் மணீஷ் சிசோடியா உள்ளிட்ட 38 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது