இந்தியா

கெஜ்ரிவாலின் ஐந்து வாக்குறுதிகள்: ஆம் ஆத்மி கட்சி அறிவிப்பு

ராம் அப்பண்ணசாமி

இந்த ஆண்டில் நடைபெற இருக்கும் ஹரியானா மாநிலப் பொதுத்தேர்தலில் தனித்துப் போட்டியிடப்போவதாக ஆம் ஆத்மி கட்சி கடந்த ஜூலை 18-ல் அறிவித்தது. இந்நிலையில் ஹரியானா பொதுத்தேர்தல் வாக்குறுதிகளை ` கெஜ்ரிவாலின் ஐந்து வாக்குறுதிகள்’ என்ற பெயரில் இன்று வெளியிட்டுள்ளது ஆம் ஆத்மி கட்சி.

முதல் வாக்குறுதியாக, தில்லி மற்றும் பஞ்சாபில் இருப்பதைப் போல 24 மணி நேரம் தடையில்லா மின்சாரம் ஹரியானாவில் வழங்கப்படும். மின்வெட்டுப் பிரச்சனை சரி செய்யப்பட்டு, நிலுவையில் உள்ள பழைய மின் கட்டண பாக்கிகள் அனைத்தும் ரத்து செய்யப்படும் என்று அறிவித்துள்ளது ஆம் ஆத்மி.

இரண்டாவதாக, `ஆம் ஆத்மி கட்சி ஆட்சிக்கு வந்தால் மக்கள் அனைவருக்கும் தரமான இலவச சுகாதார வசதிகள் ஏற்படுத்தித்தரப்படும். தில்லி மற்றும் பஞ்சாபில் இருப்பதைப் போல மொஹல்லா கிளீனிக்குகள் ஒவ்வொரு கிராமங்களிலும் நிறுவப்படும். ஹரியானா குடியிருப்பு வாசிகள் ஒவ்வொருவருக்கும் இலவச சிகிச்சை அளிக்கப்படும்’ என்ற வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.

மூன்றாவது வாக்குறுதியாக தரமான இலவசக் கல்வியும் நான்காவது வாக்குறுதியாக ஹரியானா மாநில மகளிருக்கு மாதம் ரூ. 1000 உதவித் தொகையும், ஐந்தாவது வாக்குறுதியாக ஒவ்வொரு ஹரியானா இளைஞருக்கும் வேலைவாய்ப்பு ஏற்பாடுகள் செய்துதரப்படும் என்றும் ஆம் ஆத்மி கட்சி அறிவித்துள்ளது.

அகில இந்திய அளவில் இண்டியா கூட்டணியில் இடம்பெற்றிருந்தாலும், ஹரியானா பொதுத் தேர்தலில் தனித்துக்களம் காண ஆம் ஆத்மி கட்சி முடிவு செய்துள்ளது. ஹரியானா பொதுத்தேர்தல் வாக்குறுதிகள் வெளியீட்டு நிகழ்ச்சியில், கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா, பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் ஆகியோர் பங்குபெற்றனர்.