இந்தியா

வெளியான இறுதி வேட்பாளர் பட்டியல்: பாஜகவுக்கு பதிலளித்த கெஜ்ரிவால்!

வேலை பார்ப்பவர்களுக்கு டெல்லி மக்கள் வாக்களிப்பார்கள். அச்சுறுத்தலில் ஈடுபவர்களுக்கு அவர்கள் வாக்களிக்கமாட்டார்கள்.

ராம் அப்பண்ணசாமி

தில்லி சட்டப்பேரவை தேர்தலுக்கான ஆம் ஆத்மி கட்சியின் இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாகியுள்ளது. இதன்படி அரவிந்த் கெஜ்ரிவால், முதல்வர் ஆதிஷி ஆகியோர் கடந்த தேர்தலில் போட்டியிட்ட அதே தொகுதிகளில் மீண்டும் போட்டியிடுகின்றனர்.

70 இடங்களைக் கொண்ட தில்லி சட்டப்பேரவைக்கான பொதுத்தேர்தல் வரும் பிப்ரவரியில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தேர்தலை தனித்துத் சந்திக்கப் போவதாக அறிவித்தார் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால். இதைத் தொடர்ந்து மூன்று கட்டமாக அக்கட்சியின் வேட்பாளர் பட்டியல் வெளியானது.

இந்நிலையில், சட்டப்பேரவை தேர்தலுக்கான இறுதி கட்ட வேட்பாளர் பட்டியலை இன்று வெளியிட்டது ஆம் ஆத்மி கட்சி. 35 தொகுதிகளுக்கான இந்த வேட்பாளர் பட்டியலில், மீண்டும் புது தில்லி தொகுதியில் இருந்த கெஜ்ரிவாலும், கல்காஜி தொகுதியில் இருந்து முதல்வர் ஆதிஷியும் போட்டியிடுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அரவிந்த் கெஜ்ரிவால், `பாஜகவைக் எங்கும் காணவில்லை. அவர்களிடம் முதல்வர் வேட்பாளர் இல்லை, திட்டம் கிடையாது, தில்லிக்கான தொலை நோக்குத் திட்டமும் கிடையாது. 5 வருடங்களில் அவர்கள் என்ன செய்தனர் என கேளுங்கள். நாங்கள் கெஜ்ரிவாலை அச்சுறுத்தினோம் என அவர்கள் கூறுவார்கள்.

கடந்த 10 வருடங்களாக நாங்கள் மேற்கொள்ளப்பட்ட பணிகளின் பட்டியல் எங்களிடம் உள்ளது. வேலை பார்ப்பவர்களுக்கு டெல்லி மக்கள் வாக்களிப்பார்கள். அச்சுறுத்தலில் ஈடுபவர்களுக்கு அவர்கள் வாக்களிக்கமாட்டார்கள்’ என்றார்.

ஆம் ஆத்மியின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலில், ஜாங்புரா தொகுதியில் இருந்து முன்னாள் துணை முதல்வர் மணிஷ் சிசோடியா போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது பட்பர்கஞ்ச் தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினராக உள்ளார் மணிஷ் சிசோடியா.

இதை முன்வைத்து விமர்சித்திருந்த தில்லி பாஜக தலைவர் வீரேந்திர சச்தேவா, `தோல்வி பயத்தால் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் பலர் தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை. முன்னாள் துணை முதல்வர் தொகுதி மாறிவிட்டார். அரவிந்த கெஜ்ரிவாலும், ஆதிஷியும் (தொகுதி) மாறிவிடுவார்கள்’.