ANI
இந்தியா

தேர்தல் முடிவுகள் வெளியாகும் முன்பே பேரத்தை தொடங்கிய பாஜக: கெஜ்ரிவால் குற்றச்சாட்டு

நடவடிக்கை எடுக்க ஊழல் தடுப்புத்துறைக்கு உரிமை கிடையாது. அவர்களிடம் எந்த ஒரு ஆவணமும் இல்லை.

ராம் அப்பண்ணசாமி

தில்லி சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் நாளை (பிப்.8) வெளியாகவுள்ள நிலையில், ஆம் ஆத்மி வேட்பாளர்களுடன் பாஜக பேரத்தை தொடங்கியதாக கெஜ்ரிவால் குற்றம்சாட்டியதை அடுத்து இது தொடர்பாக விசாரிக்க அவரது இல்லத்திற்கு ஊழல் தடுப்புத்துறை அதிகாரிகள் சென்ற விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த பிப்.5-ல் தில்லி சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை நாளை (பிப்.8) நடைபெறவுள்ளது. தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் பலவும் தில்லியின் ஆட்சியை பாஜக கைப்பற்றும் என்று கூறினாலும், தொங்கு சட்டப்பேரவை அமைவதற்கும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், பாஜகவுக்குத் தாவினால் தலா ரூ. 15 கோடியும், அமைச்சரவையில் இடமும் வழங்கப்படும் என்றும் ஆம் ஆத்மி வேட்பாளர்கள் 16 பேரிடம் பாஜக சார்பில் பேரம் பேசப்ப்பட்டதாக குற்றம்சாட்டினார் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால்.

இந்த விவகாரத்தில் ஆதரங்கள் இல்லாமல் கெஜ்ரிவாலும், ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங்கும் பாஜக மீது குற்றச்சாட்டுகளை முன்வைப்பதாகவும், தில்லியில் பதற்றத்தை உருவாக்க முயற்சி செய்வதாகவும் துணைநிலை ஆளுநர் வி.கே. சக்சேனாவுக்கு கடிதம் எழுதினார் பாஜக பொதுச்செயலாளர் விஷ்ணு மிட்டல்.

இதனைத் தொடர்ந்து, இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த ஊழல் தடுப்புத்துறைக்கு துணைநிலை ஆளுநர் வி.கே. சக்சேனா உத்தரவிட்டுள்ளதாகக் கடிதம் எழுதினார் துணைநிலை ஆளுநரின் முதன்மை செயலாளர் ஆஷிஷ் குந்த்ரா.

இதையடுத்து, இந்த விவகாரத்தில் கெஜ்ரிவாலிடம் விசாரணை நடத்த அவரது இல்லத்திற்கு ஊழல் தடுப்புத்துறை அதிகாரிகள் குழு சென்றுள்ளது. ஆனால் உள்ளே செல்ல அவர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய கெஜ்ரிவால் தரப்பு வழக்கறிஞர் ஒருவர், `நடவடிக்கை எடுக்க ஊழல் தடுப்புத்துறைக்கு உரிமை கிடையாது. அவர்களிடம் எந்த ஒரு ஆவணமும் இல்லை. அரசியல் நாடகத்தை அரங்கேற்ற இவையெல்லாம் பாஜக செய்யும் சதி’ என்றார்.