தெலங்கானா முன்னாள் முதலமைச்சரின் மகள் கவிதாவை கட்சியிலிருந்து நீக்கி, தந்தை கேசிஆர் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
தெலங்கானவில் பாரத் ராஷ்டிர சமிதி (பிஆர்எஸ்) கட்சியின் தலைவர் மற்றும் முன்னாள் முதலமைச்சருமான சந்திரசேகர் ராவின் மகளான கவிதா, தெலங்கானா மாநிலத்தின் சட்டமன்ற மேலவை உறுப்பினராகவும், பி.ஆர்.எஸ். கட்சியின் முக்கிய முகவராகவும் செயல்பட்டு வந்தார். இந்நிலையில், அண்மைக் காலமாக கட்சிக்குள் உட்கட்சிப் பூசலை உருவாக்கும் விதமாக அவர் செயல்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இது கேசிஆரை அதிருப்திக்கு உள்ளாக்கியதாகவும் தெரிய வருகிறது. ஏற்கெனவே டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டதுடன், அமலாக்கத் துறை அவரை விசாரித்து கைது செய்தது. இந்தச் சூழலில், ஒரு முக்கியப் பெண் தலைவராகக் கருதப்பட்ட கவிதாவின் சட்டப் பிரச்சனைகள், கட்சியின் நற்பெயருக்கு பெரும் களங்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்று பிஆர்எஸ். தலைமை கருதியதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், கவிதா, தற்போதைய முதலமைச்சர் ரேவந்த் ரெட்டியுடன் இணைந்து, முன்னாள் நீர்ப்பாசனத் துறை அமைச்சர் ஹரிஷ் ராவ் மற்றும் முன்னாள் ராஜ்யசபா எம்.பி. ஜே. சந்தோஷ் குமார் ஆகியோர் சொத்துக்களைக் குவித்து, கே.சி.ஆரின் புகழுக்குக் களங்கம் விளைவிப்பதாகக் குற்றம் சாட்டினார். “கே.சி.ஆருக்கு ஏன் ஊழல் கறை ஏற்பட்டது என்பதை நாம் சிந்திக்க வேண்டும். அவரது பெயரைப் பயன்படுத்தி அவருக்கு நெருக்கமான சிலர் பல வழிகளில் ஆதாயம் அடைந்தனர். ஐந்து ஆண்டுகள் நீர்ப்பாசனத் துறை அமைச்சராக இருந்த ஹரிஷ் ராவிற்கு இதில் முக்கிய பங்கு இல்லையா?” என்று கவிதா கேள்வி எழுப்பினார். மேலும், ரேவந்த் ரெட்டி, ஹரிஷ் ராவ் மற்றும் சந்தோஷ் குமாரைப் பாதுகாப்பதாகவும், அவர்கள் கே.சி.ஆரை குறிவைக்க கைகோத்துள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
இதையடுத்து, கட்சியின் அடிப்படைக் கொள்கைகள் மற்றும் ஒழுங்குமுறைகளுக்கு எதிராக கவிதாவின் நடவடிக்கைகள் இருப்பதாகக் குற்றம் சாட்டி, அவரை கட்சியில் இருந்து நீக்குவதாக கே.சி.ஆர் அறிவித்துள்ளார்.