இந்தியா

ஆபாசக் காணொலி வழக்கு: பிரஜ்வல் ரேவண்ணா கட்சியிலிருந்து இடைநீக்கம்

கிழக்கு நியூஸ்

ஆபாசக் காணொலி வழக்கில் சிறப்பு விசாரணைக் குழுவை எதிர்கொண்டு வரும் பிரஜ்வல் ரேவண்ணா மதச்சார்பற்ற ஜனதா தளத்திலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

மதச்சார்பற்ற ஜனதா தளத் தலைவர் தேவெகௌடாவின் பேரன் பிரஜ்வல் ரேவண்ணா தொடர்புடைய ஆபாசக் காணொலி விவகாரம் கர்நாடகம் முழுக்க பூதாகரமானதைத் தொடர்ந்து, அவரைக் கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்வது குறித்து முடிவெடுக்க மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் உயர்நிலைக் கூட்டம் இன்று ஹூப்ளியில் கூடியது.

இந்தக் கூட்டத்தில் பிரஜ்வல் ரேவண்ணாவைக் கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்ய வேண்டும் என உயர்நிலைக் குழு பரிந்துரைத்தது.

இதுகுறித்து உயர்நிலைக் குழுத் தலைவர் ஜிடி தேவெகௌடா கூறியதாவது:

"பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளதை நாங்கள் வரவேற்கிறோம். சிறப்பு விசாரணைக் குழுவின் விசாரணை நிறைவடையும் வரை அவரைக் கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்ய வேண்டும் என கட்சியின் தேசியத் தலைவரிடம் பரிந்துரை செய்ய முடிவு செய்துள்ளோம். சிறப்பு விசாரணைக் குழுவின் விசாரணை நிறைவடைந்தவுடன், அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

முதலிரண்டு கட்டத் தேர்தலில் பாஜகவுடன் இணைந்து 14 இடங்களை வென்று, பிரதமர் மோடியை மீண்டும் ஆட்சியில் அமர வைப்பதே எங்களுடைய நோக்கம். எங்களுடைய கட்சி நிர்வாகிகள் மற்றும் பாஜக தலைவர்களுடன் ஆலோசனை நடத்தவுள்ளோம். இந்த வழக்கில் பிரதமர் மோடியைத் தொடர்புபடுத்துவது ஏன்?

சிறப்பு விசாரணைக் குழுவின் விசாரணை நிறைவடையும் வரை அவர் இடைநீக்கம் செய்யப்படுவார். அனைத்து மூத்தத் தலைவர்களும் ஹாசனில் முகாமிட்டுள்ளார்கள். உண்மையில் வெளிவரட்டும்" என்றார் அவர்.

செய்தியாளர்களைச் சந்தித்த குமாரசாமி, "பிரஜ்வல் ரேவண்ணாவை இடைநீக்கம் செய்ய உயர்நிலைக் கூட்டத்தில் முடிவு செய்துள்ளோம். நாங்கள் எப்போதும் கர்நாடகப் பெண்களுடன் துணை நிற்போம்" என்றார்.

பிரஜ்வல் ரேவண்ணா தொடர்புடைய ஆபாசக் காணொலி விவகாரம் குறித்து விசாரிக்க கர்நாடக காங்கிரஸ் அரசு சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்துள்ளது.

இதனிடையே, பிரஜ்வல் ரேவண்ணா வீட்டில் முன்பு பணிபுரிந்த பெண் பணியாளர் அளித்த புகாரின் பெயரில் பிரஜ்வல் ரேவண்ணா மீது கர்நாடக காவல் துறையினர் பாலியல் வன்கொடுமை வழக்கில் வழக்குப்பதிவு செய்துள்ளார்கள். தேவெகௌடாவின் மகன் ஹெச்டி ரேவண்ணா மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.