வாக்குத் திருட்டு நடைபெற்றபோது, கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்ததாகக் கூறிய அமைச்சர் கே.என். ராஜன்னா, தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
காங்கிரஸ் மூத்த தலைவரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி தேர்தல் ஆணையம் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை அடுக்கியுள்ளார். பாஜகவுடன் இணைந்து வாக்குத் திருட்டில் ஈடுபடுவதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
கடந்த வாரம் செய்தியாளர்களைச் சந்தித்த ராகுல் காந்தி, வாக்குத் திருட்டுக்கு உதாரணமாக மத்திய பெங்களூரு நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள மஹாதேவபுரா சட்டப்பேரவைத் தொகுதியில் வாக்குத் திருட்டு நடைபெற்றதற்கான தரவுகளை முன்வைத்தார்.
ராகுல் காந்தியின் இந்தச் செய்தியாளர் சந்திப்பு ஒட்டுமொத்த நாட்டையே உலுக்கியுள்ளது. கர்நாடகத்தைக் கூடுதலாக உலுக்கியுள்ளது வாக்குத் திருட்டு விவகாரம்.
கர்நாடக அமைச்சர் கே.என். ராஜன்னா கடந்த 9 அன்று செய்தியாளர்களிடம் பேசியதாவது:
"வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டது எப்போது? எங்களுடைய அரசு ஆட்சியில் இருந்தபோது தான் வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டது. அந்த நேரத்தில் அனைவரும் கண்களை மூடிக்கொண்டிருந்தார்களா? முறைகேடுகள் நடந்துள்ளன. அது உண்மை தான். அதில் எந்தச் சந்தேகமும் இல்லை.
இந்த முறைகேடுகள் நம் கண்முன் நடந்துள்ளன. இதற்கு நாம் வெட்கப்பட வேண்டும். அப்போது நாம் இதைக் கண்டுகொள்ளவில்லை. எனவே தான் வரும் காலங்களில் நாம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டபோது நாம் அதைக் கண்காணித்திருக்க வேண்டுமல்லவா? வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டபோது, நாம் எதிர்ப்புகளைத் தெரிவித்திருக்க வேண்டும். அது நம் பொறுப்பு. அந்த நேரத்தில் நாம் அமைதியாக இருந்துவிட்டு, தற்போது பேசுகிறோம்" என்று கூறினார் கே.என். ராஜன்னா.
சொந்தக் கட்சி மீதே அமைச்சர் கே.என். ராஜன்னா விமர்சனம் வைத்தது கர்நாடக அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் தான் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார் கே.என். ராஜன்னா. இவருடைய ராஜினாமாவை கர்நாடக ஆளுநர் ஏற்றுக்கொண்டார்.
கே.என். ராஜன்னாவின் மகன் ராஜேந்திரா கர்நாடக சட்ட மேலவையில் உறுப்பினராக இருக்கிறார். இவரும் ராஜினாமா செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இவர் தனது ராஜினாமா கடிதத்தை முதல்வர் சித்தராமையாவிடம் அளித்துள்ளதாகச் செய்திகள் வெளியாகின்றன.
கே.என். ராஜன்னா ராஜினாமா செய்ததற்கு பாஜக மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிகள் காங்கிரஸை விமர்சித்து வருகின்றன.
Karnataka Government | K.N. Rajanna | Karnataka Minister | Resigns | Karnataka Minister Resigns | Rahul Gandhi | Mahadevapura Assembly Constituency |