தேர்தல் நிதி பத்திரங்கள் மூலம் மிரட்டிப் பணம் பறித்ததாகத் தொடரப்பட்ட வழக்கில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது நடவடிக்கை எடுக்க கர்நாடக உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
மத்திய அரசால் கடந்த 2017-ல் அறிமுகம் செய்யப்பட்டது தேர்தல் நிதி பத்திரங்கள் நடைமுறை. அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என்று கூறி கடந்த பிப்ரவரியில் உச்ச நீதிமன்றத்தால் இந்த நடைமுறை ரத்து செய்யப்பட்டது.
சமூக செயற்பாட்டாளர் ஆதர்ஷ் ஐயர் என்பவர் பெங்களூரு நீதிமன்றத்தில் ஒரு மனுத் தாக்கல் செய்தார். இந்த மனுவில், "வேதாந்தா, ஸ்டெர்லைட், ஆரோபிந்தோ ஃபார்மா நிறுவனங்களிடமிருந்து தேர்தல் நிதிப் பத்திரங்கள் மூலம் மிரட்டிப் பணம் பறிப்பதற்காக நிதியமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் அமலாக்கத் துறை மற்றும் மற்ற அரசியலமைப்புப் பதவிகளை வகிப்பவர்களுடன் இணைந்து நிதியமைச்சர் சதித் திட்டம் தீட்டி சோதனைகள் நடத்தியுள்ளார்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மனுவில் அமலாக்கத் துறை, பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி. நட்டா, கர்நாடக பாஜக தலைவர் விஜயேந்திரா மற்றும் பாஜக முன்னாள் எம்.பி. நலீன் குமார் ஆகியோரது பெயர்களும் இடம்பெற்றுள்ளது.
இந்த வழக்கில் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு செய்ய பெங்களூரு நீதிமன்றம் கடந்த 27-ல் உத்தரவிட்டது. இந்த உத்தரவின் பெயரில் பெங்களூரு நகர காவல் துறையினர் கடந்த 28 அன்று வழக்குப்பதிவு செய்தார்கள்.
பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் நலின் குமார் இதை எதிர்த்து கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்குப்பதிவில் இவர் 4-வது குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்த வழக்கை விசாரித்த கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி எம் நாகபிரசன்னா, மிரட்டிப் பணம் பறித்தல் தொடர்புடைய வழக்கில் நீதிமன்றம் அல்லது காவல் நிலையத்தில் முறையிடுபவர், குற்றம்சாட்டப்பட்டவரால் அச்சுறுத்தப்பட்டிருக்க வேண்டும் அல்லது ஏதேனும் பொருள்களை/சொத்துகளை குற்றம்சாட்டப்பட்டவரிடம் ஒப்படைத்திருக்க வேண்டும் என்று கூறினார். இந்த அம்சங்களை பெங்களூரு நீதிமன்றம் கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை என்று கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி கருதியிருக்கிறார். இதைத் தொடர்ந்து, வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணை வரை நிர்மலா சீதாராமன் மீது நடவடிக்கை எடுக்க இடைக்காலத் தடை விதித்தார்.
இந்த வழக்கு அக்டோபர் 22-ல் மீண்டும் விசாரணைக்கு வருகிறது.