ANI
இந்தியா

மாநில அரசுக்கு 9 கேள்விகள்: கர்நாடக உயர் நீதிமன்றம்!

கூட்ட நெரிசல் விவகாரம் தொடர்பான விசாரணை குற்றப் புலனாய்வுத்துறைக்கு மாற்றப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டது.

ராம் அப்பண்ணசாமி

பெங்களூரு கூட்ட நெரிசல் உயிரிழப்புகள் வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் தொடர்பான மனுக்களை இன்று (ஜூன் 10) விசாரித்த கர்நாடக உயர் நீதிமன்றம், மாநில அரசை கடுமையாக சாடியது. ஆர்சிபி வெற்றிக்கொண்டாட்ட நிகழ்வை அரசு கையாண்ட விதம் மற்றும் அதன் பின்விளைவுகள் குறித்து நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

இந்த விவகாரத்தில் கர்நாடக அரசின் நடவடிக்கைகள் குறித்த விவரங்களைக் கோரி, கர்நாடக அரசுத் தரப்பில் ஆஜரான அம்மாநில அரசு தலைமை வழக்கறிஞரிடம் பல்வேறு கேள்விகளை உயர் நீதிமன்றம் எழுப்பியது.

கூட்ட நெரிசல் விவகாரம் தொடர்பான விசாரணை குற்றப் புலனாய்வுத் துறைக்கு மாற்றப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டது. இருப்பினும், பெங்களூரு மாநகர காவல்துறையின் மத்திய குற்றப்பிரிவு இந்த விவகாரத்தில் இன்னும் கைது நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் குற்றம்சாட்டப்பட்டவர்களை கப்பன் பார்க் காவல்துறையினர் ஆஜர்படுத்தி வருகின்றனர்.

வழக்கு விசாரணை மாற்றம் குறித்து நீதிமன்றத்திற்கு தெரிவிப்பதில் ஏற்பட்ட நடைமுறை தவறை அரசு தலைமை வழக்கறிஞர் ஒப்புக்கொண்ட பிறகு, உயர் நீதிமன்றம் மாநில அரசுக்கு ஒன்பது முக்கிய கேள்விகளை எழுப்பியது:

1)    வெற்றிக் கொண்டாட்டத்தை நடத்த எப்போது, யாரால் முடிவு செய்யப்பட்டது? எந்த முறையில் நடத்த முடிவெடுக்கப்பட்டது?

2)    போக்குவரத்தை ஒழுங்குபடுத்த என்னென்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன?

3)    பொதுமக்கள்/கூட்டத்தை ஒழுங்குபடுத்த என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன?

4)    வெற்றிக் கொண்டாட்டம் நடைபெற்ற இடத்தில் என்னென்ன மருத்துவ மற்றும் பிற வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன?

5)    வெற்றிக் கொண்டாட்டத்தில் கலந்துகொள்ளக்கூடும் என்று எதிர்பார்க்கப்பட்ட பொதுமக்கள் எண்ணிக்கை குறித்து முன்கூட்டியே மதிப்பீடு செய்யப்பட்டதா?

6)    (கூட்ட நெரிசலில் சிக்கி) காயமடைந்தவர்களுக்கு உடனடியாக மருத்துவ உதவி வழங்கப்பட்டதா? இல்லையென்றால், ஏன்?

7)    காயமடைந்தவர்களை மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்ல எவ்வளவு நேரம் எடுத்துக்கொள்ளப்பட்டது?

8)    இதுபோன்ற விளையாட்டு நிகழ்வுகள் அல்லது கொண்டாட்டங்களின்போது 50,000 மற்றும் அதற்கு மேற்பட்ட கூட்டத்தை நிர்வகிக்க ஏதேனும் திட்டம் (SOP) வகுக்கப்பட்டுள்ளதா?

9)    நிகழ்வை ஏற்பாடு செய்ய ஏதேனும் அனுமதி கோரப்பட்டதா?

கேள்விகளுக்கு பதில்களை தாக்கல் செய்ய அவகாசம் கோரியுள்ள மாநில அரசு, சீலிட்ட உறையில் பதில்களை தாக்கல் செய்யும் என்று எதிர்பாக்கப்படுகிறது. இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணை ஜூன் 12-க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.