கர்நாடக திரையரங்குகளில் டிக்கெட் கட்டண வரம்பை ரூ. 200 ஆக நிர்ணயம் செய்து கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது.
கர்நாடக சினிமாஸ் (ஒழுங்குமுறை) விதி 2014-ல் திருத்தம் மேற்கொண்டு இந்தக் கட்டண வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் பட்ஜெட் உரையைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி கர்நாடகத்தில் உள்ள மல்டிபிளக்ஸ் உள்ளிட்ட அனைத்து திரையரங்குகளிலும் எந்தவொரு காட்சிக்கும் டிக்கெட் கட்டணமானது கேளிக்கை விதி உள்பட ரூ. 200-ஐ தாண்டக் கூடாது.
2017-ல் சித்தராமையா தலைமையிலான முதல் ஆட்சியில் இதுபோல சினிமா டிக்கெட் கட்டணத்தைக் குறைக்க முயற்சிக்கப்பட்டது. ஆனால், மல்டிபிளக்ஸ் திரையரங்க உரிமையாளர்கள் வருவாய் இழப்பு ஏற்படும் என எதிர்ப்பு தெரிவித்தார்கள். கர்நாடக உயர் நீதிமன்றத்திலும் முறையிடப்பட்டது. இதைத் தொடர்ந்து, டிக்கெட் கட்டணம் குறைக்கப்பட்ட முடிவு திரும்பப் பெறப்பட்டது.
கர்நாடகத்தில் மல்டிபிளெக்ஸில் சராசரியாக ரூ. 260-க்கு சினிமா டிக்கெட் விற்பனை செய்யப்படுகிறது. தற்போது ரூ. 200 என கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள நிலையில், மல்டிபிளெக்ஸ் பெருமளவில் பாதிப்பை எதிர்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Cinema Ticket | Karnataka Government | Karnataka | Cinema | Film Price | Cinema Ticket Price | Rs. 200 Cap