மாணவர்களுடன் கர்நாடக பள்ளிக்கல்வி அமைச்சர் மது பங்காரப்பா 
இந்தியா

இருமொழிக் கொள்கை: கர்நாடக மாநில கல்விக் கொள்கை ஆணையம் பரிந்துரை | Karnataka | SEP

நடுநிலைப் பள்ளிகளில் கன்னடத்தை பயிற்று மொழியாக அறிமுகப்படுத்த பரிந்துரையில் முன்மொழியப்பட்டுள்ளது.

ராம் அப்பண்ணசாமி

இருமொழிக் கொள்கை, குறைந்தபட்சம் 5-ம் வகுப்பு வரை கன்னடத்தை பயிற்று மொழியாக ஊக்குவித்தல், 12-ம் வகுப்பு வரை கன்னடத்தை பயிற்று மொழியாக்க முன்னுரிமை அளித்தல் என மாநிலத்தின் பள்ளிக் கல்வி முறையில் மிகப்பெரிய அளவிலான மாற்றங்களை கொண்டுவரும் நோக்கில் கர்நாடக மாநில கல்விக் கொள்கை ஆணையம் பல்வேறு பரிந்துரைகளை வழங்கியுள்ளது.

பிரபல கல்வியாளரும், முன்னாள் பல்கலைக்கழக மானியக் குழுவின் தலைவருமான பேராசிரியர் சுகதேவ் தோரட் தலைமையிலான ஆணையத்தின் அறிக்கை (குழு அமைக்கப்பட்டு கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு) கடந்த ஆக. 8 அன்று கர்நாடக முதல்வர் சித்தராமையாவிடம் சமர்ப்பிக்கப்பட்டது.

கர்நாடக மாநில கல்விக் கொள்கை ஆணையம்

தேசிய கல்விக் கொள்கையை நிராகரிக்கும் முடிவில் உறுதியாக இருந்த கர்நாடக மாநில அரசு, பிராந்திய முன்னுரிமைகள் மற்றும் அரசியலமைப்பு கொள்கைகளை அடிப்படையாக வைத்து மாநிலத்திற்கு ஏற்ற கொள்கையை உருவாக்கும் பணியை மாநில கல்விக் கொள்கை ஆணையத்திடம் ஒப்படைத்ததாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

மாநில கல்விக் கொள்கை ஆணையம் அளித்துள்ள பரிந்துரைகள், மும்மொழிக் கொள்கையை பரிந்துரைக்கும் தேசிய கல்விக் கொள்கைக்கு முரணாக உள்ளன.

மாநிலத்தில் உள்ள அனைத்து வாரியங்களை சேர்ந்த பள்ளிகளும் கன்னடம் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளைப் பின்பற்றவேண்டும் என்று ஆணையம் பரிந்துரை வழங்கியுள்ளது.

மிகவும் குறிப்பாக நடுநிலைப் பள்ளிகளில் கன்னடத்தை பயிற்று மொழியாக அறிமுகப்படுத்த பரிந்துரையில் முன்மொழியப்பட்டுள்ளது.

கல்வி உரிமை சட்டத்தின்படி (RTE) தற்போது நடைமுறையிலுள்ள 6–14 வயது வரம்பை, 4–18 வயது வரம்பாக விரிவுபடுத்த பரிந்துரை வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தொடக்க கல்விக்கு முந்தைய நிலையில் உள்ள குழந்தைகளும், உயர்நிலைப் பள்ளி மாணவர்களும் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்படுவார்கள்.